வடக்கு மாகாணத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 20 வயதுக்கு மேற்பட்ட நோய் எதிர்ப்புப் பிரச்சினை உள்ளவர்களுக்கும் கொரோனாத் தடுப்பூசியின் நான்காவது டோஸ் (பைஸர்) ஏற்றப்படவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
இந்தவாரம் முதல் தடுப்பூசி ஏற்றல் ஆரம்பிக்கப்படவுள்ளது என்றும்,ஏற்கனவே தடுப்பூசிகளை மூன்று தடவைகள் ஏற்றி, மூன்று மாதங்கள் நிறைவடைந்தவர்கள் மட்டுமே தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தந்தப் பிரதேசங்களுக்குரிய சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையில் தடுப்பூசி ஏற்றப்படும் என்றும், தடுப்பூசி அட்டையைச் சமர்ப்பித்து நான்காவது தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை மற்றும் பருத்தித்துறை, ஊர்காவற்றுறை, தெல்லிப்பழை, சாவகச்சேரி ஆதார மருத்துவமனைகளிலும், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் பொது மருத்துவமனைகளிலும் தடுப்பூசி ஏற்றப்படும்.
20 வயதுக்கு மேற்பட்ட பின்வரும் நோய்நிலைமை உள்ளவர்களுக்கும் தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது.
நோய் எதிர்ப்புக் குறைபாட்டு நிலைமை நோயாலோ அல்லது நோய்க்குரிய சிகிச்சையாலோ ஏற்பட்டவர்கள், நாள்பட்ட சிறுநீரக தொகுதியுடன் தொடர்புடைய நோய் நிலைமைகள், திண்ம அங்கங்கள் ( சிறுநீரகம், ஈரல், சுவாசப்பை போன்றவை) மற்றும் என்புமச்சை அல்லது ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சைக்குட்பட்டவர்கள், புற்றுநோய் உடையவர்களில் அதற்கான சிகிச்சை பெறுபவர்கள் மற்றும் அதற்குரிய சிகிச்சையை நிறைவு செய்தவர்கள், மண்ணீரல் இல்லாதவர்கள் மற்றும் மண்ணீரல் தொழிற்பாட்டு பிரச்சினை உடையவர்கள், வேறு ஏதாவது நோய் நிலைமைகளால் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்த நிலையில் உள்ளவர்கள் என சிகிச்சை அளிக்கும் பொது மருத்துவ நிபுணரால் தடுப்பூசிக்காக பரிந்துரைக்கப்படுபவர்கள் போன்றோருக்கே தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது.
Discussion about this post