மு.கு: முகப்பில் இணைக்கப்பட்டுள்ள படத்துக்கும், கீழே குறிப்பிடப்படுகின்ற நபர்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. தமிழரசுக் கட்சி மத்திய குழுக் கூடத்தை அடையாளப்படுத்துவதற்காக மட்டுமே கூட்டத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் Thumbnailஆகப் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
தமிழரசுக் கட்சி உடைந்து சிதறுவதை யாராலும் தடுக்கமுடியாது என்று அச்சப்படும் அளவுக்கு, நிலமை மோசமான கட்டத்தை நோக்கிச்சென்றுகொண்டிருக்கின்றது என்பதை, நேற்றைய தினம் நடைபெற்ற மத்திய குழுக் கூட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் சுட்டிக்காண்பித்து நிற்கின்றன.
பொதுவாகவே அரசியல்கட்சிகளின் மத்தியக்குழுக்கூட்டங்களில் வாதப்பிரதிவாதங்கள், இழுபறிகள், கருத்துமுரன்பாடுகள் இடம்பெறுவது வளமைதான் என்றாலும், கட்சியை முடக்கும்படியான வழக்குகளை கட்சியின் பிரமுகர்களே திட்டமிட்டு தாக்கல்செய்வது, தெரிவுசெய்யப்பட்ட தலைவரை இயங்கவிடாமல் தடுப்பது, குறிப்பிட்ட சில பிரதேசத்தைச் சேர்ந்த உறுப்பினர்களை அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்தைக் கூறியே அவர்களைப் பேசவிடாமல் தடுப்பது, பிரதேசவாத வசைபாடல்கள்.. இவைகள் போன்றன, தமிழரசுக் கட்சியின் எதிர்காலம் பற்றிய கவலையை கட்சி உறுப்பினர்களுக்கு ஏற்படுத்தி வருகின்றது.
நேற்றைய தினம் நடைபெற்ற தமிழரசுக்கட்சி மத்தியகுழுக்கூட்டத்தில் இவை எல்லாமே நடைபெற்றன என்பதை சமூக ஊடகங்களின் வாயிலாகவும், தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர்களின் ஊடாகவும் அறியக்கூடியதாக இருக்கின்றது.
தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் (சிரேஷ்ட உறுப்பினர் என்றால் தமிழரசுக் கட்சிக்கு அண்மையில் இறக்குமதி செய்யப்பட்டு தற்பொழுது நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் அல்ல- கட்சியின் பாரம்பரியம் தெரிந்து நீண்டகாலமாக அந்தக் கட்சியில் அங்கத்துவம் வகிக்கின்ற ஒருவர்) எம்மிடம் தெரிவுக்கும் போது, ‘..தமிழரசுக் கட்சிக்கு முடிவுரை எழுவது என்று தீர்மானித்து விட்டானுகள்..’ என்று தெரிவித்தார்.
“இந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழரசுக் கட்சியையும், தமிழ் மக்களையும் தென்னிலங்கை வேட்பாளர் ஒருவருக்கு மலிவான விலையில் விற்பதற்கு சிலர் கங்கணம்கட்டி நிற்பது தெளிவாகத் தெரிகின்றது. எல்லாம் முடிந்துவிட்டது..” என்று கவலை வெளியிட்டார்.
‘ஒரு சிலர் எதற்காக இறக்கப்பட்டார்களோ அவர்கள் தங்களுடைய பணியைச் சரியாகச் செய்துமுடித்துவிட்டார்கள். இனி தமிழரசுக் கட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதுதான் மிச்சம்..’ என்று கூறினார்.
‘தமிழ் தேசியச் சிந்தனையோ, தமிழ் மக்கள் பற்றிய உண்மையான அக்கறையோ இல்லாத ஜென்மங்கள் இப்பொழுது தமிழரசுக் கட்சியின் முகம்களாக மாறிவிட்டதன் பலனை தமிழ் இனம் அனுபவிக்கத்தொடங்கிவிட்டது’ என்றும் அவர் ஆதங்கப்பட்டார்.
அத்தோடு, சில உறுப்பினர்கள் பிரதேசவாதக் குறியீடுகள் கூறப்பட்டு அந்த ‘இறக்குமதிகளினால்’ அவமதிக்கப்பட்டபோதும் கூட, அதனை தற்போதைய தலைவர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததாகவும் தமிழரசுக் கட்சியின் அந்த சிரேஷ்ட உறுப்பினர் கவலை வெளியிட்டார்.
Discussion about this post