மனித உரிமைகள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் தந்துள்ள வாக்குறுதிகளை
நிறைவேற்றிக்கொள்வதற்கான சிறந்த தருணம் வந்துள்ளதாக, மனித உரிமைகள்
கண்காணிப்பகம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தெரிவித்துள்ளது.
இலங்கையில் மனித உரிமைகள் தொடர்ந்தும் மீறப்படுவதை தடுப்பதற்காக ஐரோப்பிய
ஒன்றியம் சர்வதேச சமூகத்துடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என மனித
உரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ளது.
இலங்கைக்கு GSP வரிச் சலுகையை மீள வழங்குவது தொடர்பில் ஆராயப்பட்டு
வருகின்ற நிலையிலேயே ஐரோப்பிய ஒன்றியத்திடம் மனித உரிமைகள் கண்காணிப்பகம்
இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டம்,
சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக சீரமைக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகளின்
விசேட பிரதிநிதிகள் 7 பேர் ஒன்றிணைந்த அறிக்கை மூலம் கூறியுள்ளனர்.
பங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை
மேற்கொள்ளத் தவறியமை கவலையளிப்பதாகவும் அந்த ஒன்றிணைந்த அறிக்கையில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
பயங்கரவாதம் என்பதற்கான சரியான வரைவிலக்கணம் – தடுத்து வைத்தல்
தொடர்பிலுள்ள உத்தரவுகள் மற்றும் தான்தோன்றித் தனமான கைதிகளின் தடுப்பு
தொடர்பில் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக ஐ.நா-வின்
விசேட பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடர்
நடைபெறவுள்ளதன் பின்புலத்திலேயே இந்த ஒன்றிணைந்த அறிக்கை
வௌியிடப்பட்டுள்ளது.
Discussion about this post