“கன்யா கதே சவிதரி ஸக்ருத் ஆஷாடாதி பஞ்சம அமர பக்ஷே” சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் புண்ணியமிகு புரட்டாசி மாதத்தில் கிருஷ்ணபட்சப் பிரதமை முதல் அமாவாசைவரை உள்ள காலத்துக்கு பித்ரு பட்சம், மகாளயம் என்று பெயர். மேற்கண்ட பதினைந்து நாள்களில் ஒரு முறையும் அமாவாசையன்று ஒரு முறையும் ஆக இரண்டு முறை தர்ப்பணம்செய்வது சிறப்பு. மகாளய பட்ச காலத்தில் மஹாபரணி, மத்யாஷ்டமி, மஹாவியதீபாதம், வைதிருதி, அவிதவா நவமி ஆகிய நாள்களில் தர்ப்பணம் விடுவது சிறப்பு, இந்நாள்களில் தர்ப்பணம் விட முடியாதவர்கள் மற்ற ஏதாவது ஒரு நாளில் மகாளய பட்சத்திற்குள் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
மகாளய பட்ச காலத்தில் நமது முன்னோர்கள் நாம் செலுத்தும் தர்ப்பணத்திற்காகக் காத்திருப்பார்கள் என்பது ஐதிகம். மகாளய பட்ச தர்ப்பணம் செய்வதால் நமது முன்னோர்கள் ஆசியுடன் நமது வாழ்க்கை சிறப்படையும். புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மகாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. முன்னோர்கள் பூலோகம் வரும் நாளாக மகாளய அமாவாசை கருதப்படுகிறது. ‘மகாளயம்’ என்றால் ‘பெரிய கூட்டம் என்று பொருள்’. மறைந்த நம் முன்னோர் மொத்தமாக நம் இல்லத்தில் கூடும் நேரமே மகாளய பட்சம். பட்சம் என்றால் பதினைந்து நாள்கள். முன்னோர் பித்ரு லோகத்திலிருந்து இந்த பதினைந்து நாள்கள் நம்மோடு தங்கும் காலமே மகாளய பட்சம் ஆகும்.
மகாளய பட்சம் 2021:
முன்னோர்கள் பூலோகம் வரும் மகாளய பட்சம் இந்த சார்வரி வருட 21-09-2021 செவ்வாய் கிழமை முதல் ஆரம்பம் ஆகிறது. இன்று முதல் பதினைந்து நாள்களுக்கு மகாளய பட்சம் காலமாகும். புரட்டாசியில் வரும் அமாவாசையே மகாளய அமாவாசை எனப்படும். இந்த வருட புரட்டாசி மாதம் அமாவாசை 06/10/2021 புதன் கிழமையில் வருகிறது.
தந்தை, தாத்தா, கொள்ளுத் தாத்தா, தாயார், பாட்டி, கொள்ளுப் பாட்டி (தாயார் உயிருடன் இருந்தால் பாட்டி, கொள்ளுப் பாட்டி, எள்ளுப் பாட்டி), தாய் வழித் தாத்தா பாட்டி என மூன்று தலைமுறையினர், நம் ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், பங்காளிகள் மற்றும் அனைவருக்குமாக இந்தக் காலங்களில் தர்ப்பணம் செய்யலாம். சிலருக்குக் கர்ப்பத்திலேயே கரு கலைந்திருக்கலாம்; சிறு குழந்தையாக இருக்கும்போதே இறந்திருக்கலாம்; சிலர், விபத்து போன்று அகால மரணம் அடைந்திருக்கலாம். அந்த ஆத்மாக்கள் அனைத்தையும் திருப்தி அடையச் செய்வதற்கான சிறந்த நாளே மகாளய பட்சம்.
2021 மகாளய பட்சத்தில் விசேஷமாக உள்ள நாள்கள்:
21-9-21 பிரதமை திதி
22-9-21 துவிதியை
23-9-21 திருதிதியை
24-9-21 சதுர்த்தி (மஹாபரணி)
25-9-21 பஞ்சமி
26-9-21 ஷஷ்டி
28-9-21 ஸப்தமி (மஹா வியதீ பாதம்)
29-9-21 மத்யாஷ்டமி
30-9-21 நவமி
1-10-21 தசமி
2-10-21 ஏகாதசி
3-10-21 துவாதசி
4-10-21திரயோதசி
5-10-21 சதுர்தசி ( போதாயன அமாவாசை)
6-10-21 மகாளய அமாவாசை
Discussion about this post