2001 ஆம் ஆண்டு நடிகர் அஜித் நடித்து வெளிவந்த திரைப்படம் சிட்டிசன். காணாமல் ஆக்கப்பட்ட அத்திப்பட்டி எனும் கிராமத்தின் கதையது.
அத் திரைப்படத்தில் அத்திப்பட்டி அதிகாரிகளால் காணாமல் ஆக்கப்பட்டது. ஆனால் இங்கே கிளிநொச்சியில் வன்னேரிக்குளம் கிராத்திற்கு அருகில் இருந்த குஞ்சுக்குளம் அதிகாரிகளின் அக்கறையின்மையால் காணாமல் போய்விட்டது.
வன்னியில் இவ்வாறு பல கிராமங்கள் காணாமல் போய்விட்டது. அந்த வரிசையில்தான் இன்று இப் பத்தி காணாமல் போன வன்னேரி குஞ்சுக்குளத்தின் கடந்த காலத்தை காணவிளைகிறது.
கிளிநொச்சி மேற்கே நகரிலிருந்து சுமார் 20 கிலோ மீற்றர் தொலைவில் கரைச்சி பிரதேச செயலக பிரிவின் எல்லைக் கிராமம் வன்னேரிக்குளம். வன்னேரிக்குளத்திற்கு அருகில் கடந்த இருபது, இருபதைந்து ஆண்டுகளுக்கு முன்னர் வரை இருந்த ஒரு கிராமமே குஞ்சுக்குளம்.
குஞ்சுக்குளம் 1800 களின் பிற்பகுதியில் உருவாக்கப்பட்ட கிராமம் என்கிறார் தற்போது வன்னேரி தபால் நிலையத்தில் பணியாற்றும் சங்கரப்பிள்ளை மகேஸ்வரன், தனது அப்பா 1922 ஆம் ஆண்டு குஞ்சுகுளம் கிராமத்திலேயே பிறந்ததாக அவர் கூறுகின்றார். சுமார் ஆயிரம் ஏக்கர் வரையான வயல் நிலங்களில் நெல், சிறுதானியம், கால்நடை வளர்ப்பு, வேட்டை என பல தொழில்களை செய்து இயற்கையோடு நிம்மதியாக நோயின்றி வாழ்ந்த ஊரையும் அந்த வாழ்வையும் இழந்து நிற்கின்றோம் என்றார் அவர்.
சொர்க்கமே என்றாலும் அது சொந்த ஊரை போல வராது என்பதனை அவரின் வார்த்தைகளில் இருந்து புரிந்துகொண்டோம். கோவில், குளம், பாடசாலை என இருந்த கிராமம் தற்போது வெட்டவெளியாக இருக்கிறது. ஆங்காங்கே சில எச்சங்கள் காணப்படுவதோடு, ஊரின் கோவில் இன்றும் இருக்கிறது. ஆனால் குஞ்சுக்குளம் தனது விவசாயிகளையும், விவசாய நிலத்தையும் இப்பொழுது தேடிக்கொண்டிருக்கிறது.
குஞ்சுக்குளம் ஆரம்பத்தில் உடையாரின் நிர்வாகத்தின் கீழ் இருந்தது. பின்னாட்களில் அது கிராம அலுவலரின் கீழ் வந்துவிட்டது. அங்கே யாழ் / குஞ்சுக்குளம் கணேசா வித்தியாலயம் என்ற தரம் ஐந்து வரை வகுப்புகளை கொண்ட பாடசாலை ஒன்றும் இருந்தது. அப்போது கிளிநொச்சி தனியான மாவட்டமாக பிரிக்கப்படாத காலம் அது.
குஞ்சுக்குளம் ஏன் காணாமல் போனது?
இயற்கைக்கு எதிராக மனிதனின் நடவடிக்கைகளினால் முற்று முழுதாக பாதிக்கப்படுவது மனிதனே. இதனை கண் கூடாக நாளும் அவதானித்து அனுபவித்துள்ள போதும் மனித குலம் இயற்கைக்கு எதிரான நடவடிக்கையினை நிறுத்துவதாக இல்லை. குஞ்சுக்குளம் மக்கள் இயற்கைக்கு எதிராக எதனையும் செய்யாது விடினும் இந்த நாட்டில் எங்கோ இருக்கின்ற மக்கள் மேற்கொள்ளகின்ற இயற்கைக்கு எதிரான நடவடிக்கைகளால் முதலில் பாதிக்கப்படுவது குஞ்சுக்குளம் போன்ற கிராம மக்களே.
குஞ்சுகுளம் கிராமத்தில் அன்று நெல் விளைந்த நிலத்தில் இன்று உப்பு விளைகிறது. அன்று நெல்லை அறுவடை செய்த மக்கள் இன்று உப்பு அள்ளுகின்றனர். குஞ்சுக்குளம் காணாமல் போவதற்கும் இதுவே காரணம்.
நெல்லும், ஏனைய தானிய வகைகளும் விளைந்த மண்ணை உவர் ஆக்கிரமித்துக்கொண்டது. சுத்தமான நீர் உப்பாக மாறிவிட்டது. இதுவே குஞ்சுகுளத்தை விட்டு இற்றைக்கு சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் வரை வாழ்ந்த மக்கள் இடம்பெயர்ந்து வன்னேரிக்குளம் உள்ளிட்ட மாவட்டத்தின் ஏனைய பிரதேசங்களுக்கு சென்றுவிட காரணமாயிற்று. இந்த உவர் ஆக்கிரமிப்பு ஆரம்பத்தில் குஞ்சுக்குளம் கிராமத்தின் எல்லையோரங்களில் காணப்பட்டது பின்னர் அது படிப்படியாக கிராமம் முழுவதனையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துவிட்டது என்கின்றனர் மூத்தகுடிகள்.
ஆயிரம் ஏக்கர் வரை காணப்பட்ட விவசாய நிலத்தில் தற்போது சமார் 25 ஏக்கர் வரையே மிஞ்சியிருக்கிறது அதுவும் ஏனைய நிலங்கள் போன்று அல்ல. இந்த 25 ஏக்கரும் இன்னும் ஒரு சில வருடங்களில் கைவிட வேண்டிய நிலைக்கு வந்துவிடும. குஞ்சுகுளத்தை அண்டிய பகுதியில் உள்ள இந்த நிலங்களே தற்போது ஓரளவு விதைக்க கூடியதாக இருக்கிறது. விவசாய நிலங்கள் விதைக்க முடியாத அளவுக்கு மாறிவிட கிணறுகளையும் உவர் ஆக்கிரமித்துக்கொள்ள வாழ முடியாத நிலையில் மக்கள் கிராமத்தை விட்டு வெளியேறிவிட்டனர்.
அடுத்த கிராமத்தையும் இலக்கு வைக்கும் உவர்
காணாமல் போன குஞ்சுக்குளத்தை பற்றி நாம் ஆராய தொடங்கிய போது அருகில் இருந்த வன்னேரிக்குளம் கமக்கார அமைப்பின் தலைவர் இளையதம்பி இராசலிங்கம் சொன்னார் தம்பி இன்னுமொரு இருபது வருடங்களுக்கு பின்னர் வந்து வன்னேனரிக்குளத்தையும் காணவில்லை என்று எழுதுங்கள் ஏன்னெனில் உவர் குஞ்சுகுளத்தை தாண்டி இப்போது வன்னேரியின் எல்லையில் நிற்கிறது தடுக்காது விடின் வன்னேரியும் காணாமல் போய்விடும் என்றார்.
தடுப்பதற்கு என்ன செய்யலாம்
குஞ்சுகுளம் கிராமத்திற்கு ஏற்பட்ட நிலை வன்னேரிக்குளம் கிராமத்திற்கும் ஏற்படாதிருக்க வேண்டுமெனின் மண்டக்கல்லாறில் அணைக்கட்டுங்கள் (பராஜ்) என்கின்றனர் ஊர் விவசாயிகள். கடல் நீர் ஊருக்குள் வராமல் இருப்பதற்கும், மழை நீர் வருகின்ற அதே வேகத்தில் கடலுக்கு செல்லாமல் இருப்பதற்கும் மண்டகல்லாற்றில் அணைக்கட்டுங்கள். சுமார் 3 கிலோமீற்றர் வரை அணைக்கட்டினால் வன்னேரிக்குளம் மாத்திரம் பல கிராமங்களை உவரின் ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாக்க முடியும் எனவும் அவர்கள் உறுதிப்படக் கூறுகின்றனர்.
தொடர்ச்சியாக நிர்ப்பாசனத் திணைக்களம், கமநல சேவைகள் திணைக்களம். மாவட்ட மட்ட உயரதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், மாகாண மட்ட அதிகாரிகள் என அனைவரிடதும் மகஜர்கள், அனுப்பியும் நேரடியாக தெரிவித்தும் எந்த பயனும் இல்லை எனவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த பிரதேசத்தில் உள்ள குஞ்சுக்குளம், பறையன்குளம், உப்புவில்குளம் போன்ற குளங்களை பாதுகாப்பதோடு, கடல் நீர் ஊருக்குள் வராமல் இருக்க அணையும் (பராஜ்) கட்டினால் ஊர்களை காப்பாற்ற முடியும் எனத் தெரிவிக்கின்றனர் வன்னேரிக்குளம் மக்களும்.குஞ்சுகுளத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்களும்.
Discussion about this post