கடந்த வருடம் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட யாழ்.
பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவனின் மரணம் தொடர்பிலான மர்மம்
தொடர்கின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு பிரதமர் அலுவலகம், பொலிஸ்
மா அதிபருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட மூன்றாம் வருட மாணவனான துன்னாலை
வடக்கை சேர்ந்த சிதம்பரநாதன் இளங்குன்றன் கடந்த வருடம் நவம்பர் மாதம் 17
ஆம் திகதி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
கோண்டாவில் கிழக்கு, வன்னிய சிங்கம் வீதியில் தங்கியிருந்து கல்வி
கற்றுவந்த நிலையிலேயே அவர் சடலமாக மீட்கப்பட்டார்.
இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் பிரதமரின் அலுவலகத்தில் இருந்து பொலிஸ்மா
அதிபருக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் மாதா கோவில் வீதி துன்னாலை வடக்கு கரவெட்டி
பகுதியிலிருந்து பிரதமருக்கு குறித்த மாணவனின் உறவினர்களால் 2021.07.21
ஆம் திகதி விசாரணை மேற்கொள்ளுமாறு கடிதம் மூலம் கோரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்து
நிலவும் நிறுவன ரீதியான சட்டங்கள் மற்றும் ஏற்பாடுகளுக்கு அமைவாக
பொருத்தமான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு பிரதமர் அலுவலகத்தினால்
பொலிஸ்மா அதிபருக்கு எழுதப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதம அமைச்சரின் செயலாளருக்குப் பதிலாக பிரதமரின் சிரேஷ்ட உதவிச்
செயலாளரால் பொலிஸ்மா அதிபருக்கு ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி
திகதியிடப்பட்டு இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
Discussion about this post