கோவிட் 19 தடுப்பூசிகளை பெற மறுக்கும் டொரோண்டோவின் பொதுச்சேவை பணியாளர்கள், தமது பணியினை இழக்கும் நிலை உருவாகும் என்பதை, மாநகரசபை உறுதிப்படுத்தியுள்ளது. தமது பணியாளர்களுக்கான, கட்டாய தடுப்பூசி விதிமுறை அமுல்படுத்தப்படுமென, கடந்தவாரம் டொரோண்டோ மாநகரசபை அறிவித்திருந்தது. இதன்படி, தகுந்த மருத்துவ அல்லது மனித உரிமை காரணங்களை கொண்டிருந்தால் தவிர, அனைத்து மாநகரசபை பணியாளர்களும், செப்டம்பர் 30ஆம் திகதிக்கு முன்னர் முதலாவது தடுப்பூசியாவது பெற்றிருக்க வேண்டும். அத்துடன், அக்டோபர் மாதம் நிறைவுக்கு முன்னதாக, இரண்டு தடுப்பூசிகளையும் பெற்று முடித்திருக்க வேண்டும். தடுப்பூசிகளை பெறாத பணியாளர்களின் நிலை குறித்து கடந்த வாரம் கேள்வி எழுப்பப்பட்ட போது, அதுகுறித்து ஆராய்ந்து வருவதாக டொரோண்டோ மாநகரசபை தெரிவித்திருந்தது. இந்நிலையில், டொரோண்டோ மாநகரசபையின் கட்டாய தடுப்பூசி கொள்கைக்கு கீழ்ப்படிய மறுக்கும் பணியாளர்கள், ஒழுக்காற்று நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என இன்று அறிவிப்புக்கள் வெளியாகியுள்ளதுடன், அது, பணி நீக்கத்துக்கு இட்டுச்செல்லும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post