ரணைமடு சந்தி பகுதியில் வீதியில் இராணுவத்தினரால் அமைக்கப்படும் கட்டுமான பணிகள் நிறுத்தப்படாவிடின் பிரதேச சபைகள் சட்டத்தின் கீழ் இடிக்க முடியும் என கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி- கரைச்சி பிரதேச சபையின் ஆளுகையின் கீழ் அமைந்திருக்கின்ற இரணைமடு சந்தியை மையமாக வைத்து, இராணுவத்தினரால் பாரிய வளைவு ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது. குறித்த வளைவை இடைநிறுத்தி, உரிய அனுமதியின் பிரகாரம் அதனை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட தரப்பிற்கு பல தடவை தெரிவித்துள்ளோம்.
ஆனால், இதுவரை காலமும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாதமையினால், இந்த விடயம் தொடர்பாக கரைச்சி பிரதேச சபையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது .
கிளிநொச்சி நகரத்தில் அமைக்கப்படுகின்ற வளைவுகள் மற்றும் சின்னங்கள் நகர ஆக்கத்திற்கு உதவக்கூடிய வகையிலே பொருத்தமானவகையில் அமைப்பதற்கான அனுமதிகள் துறைசார்ந்த திணைக்களங்களுடன் இணைந்ததாக வழங்கப்பட வேண்டும் என எங்களிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
இந்த நிலையில் இரணைமடு சந்தியில் இராணுவத்தினரால் அனுமதி எதுவுமின்றி வளைவு கட்டப்படுகின்றமை தொடர்பில் பொது மக்களினால் எமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இந்த முடக்க நிலையினைப்பயன்படுத்தி இராணுவத்தினர், குறித்த பணிகளை முன்னெடுத்து வருவதாக பொது மக்களால் மீண்டும் எமக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே, இந்த பணிகளை உடனே நிறுத்தி உரிய நடைமுறைகளை பின்பற்றி இராணுவத்தினர் அனுமதியினை பெற்றுக்கொள்ள வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.
Discussion about this post