தற்போது நடைமுறையில் உள்ள நாடளாவிய ரீதிலான தனிமைப்படுத்தல் ஊரடங்கு
ஓகஸ்ட் 30 ஆம் திகதிக்கு பின்னர் நீடிக்கப்படாது என சுகாதார அமைச்சர்
கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
முடக்கம் காரணமாக பொருளாதாரம் மற்றும் நாளாந்த சம்பளம் பெறுபவர்களின்
வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்பதால் அந்த தீர்மானத்திற்கு
தனிப்பட்டமுறையில் தான் எதிராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
இருப்பினும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் பரிந்துரைகளின் அடிப்படையில்
முடிவுகள் எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல
தெரிவித்தார்.
அத்தோடு நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், அனைத்து
பிரஜைகளுக்கும் விரைவில் தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்வதே
நெருக்கடியிலிருந்து வெளியேறுவதற்கான ஒரே வழி என கூறியமை மூலம் அரசாங்கம்
முடக்கத்தை நீடிக்காது என புலப்படுகின்றது.
இதற்கிடையில் இன்று இடம்பெறும் கொரோனா ஒழிப்பு செயலணி கூட்டத்தில் நாடு
தழுவிய முடக்கத்தை நீட்டிப்பதற்கு பதிலாக சில பகுதிகளை மட்டும்
முடக்குவது குறித்த முன்மொழிவு முன்வைக்கப்படும் என
எதிர்பார்க்கப்படுகின்றது.
குறித்த சந்திப்பைத் தொடர்ந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று
(வெள்ளிக்கிழமை) பிற்பகல் இறுதி முடிவை அறிவிப்பார் என அறியமுடிகின்றது.
அவ்வாறு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீடிக்கப்படாவிட்டால் எதிர்வரும்
திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணிக்கு கட்டுப்பாடுகள் அனைத்தும்
நீக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post