வரும் முன் காப்பதில் பெருமளவு வெற்றிக்கண்டு வந்த கிளிநொச்சியின் சுகாதார துறையின் சிஸ்டம் தற்போது தோல்வியடைந்துள்ளதா என்ற பலத்த சந்தேகம் பொது மக்கள் மத்தியில் ஏற்பட தொடங்கியுள்ளது. கொவிட் 19 உலக பெரும் தொற்று ஏற்பட்ட பின்னர் மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்ற சம்பவங்கள் அச் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துவதாக காணப்படுகிறது.
இவ்வாறான உலக பெரும் தொற்று ஏற்பட்டுள்ள காலத்தில் ஒவ்வொருவரும் கூட்டிணைந்து பரஸ்பர ஒத்துழைப்புடன் பணியாற்ற வேண்டிய சூழலில் அதற்கு மாறாக ஒருவருக்கொருவர் முகம் கொடுத்து பேசாது முரண்பாடுகளை வளர்த்துக்கொண்டு நவக்கிரகங்கள் போன்று இருப்பதன் விளைவை மாவட்டம் அனுப்பவிக்க தொடங்கியுள்ளது.
கிளிநொச்சியில் உள்ள ஆடைத்தொழிற்சாலைகளில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வந்த நிலையில் அது தொடர்பில் தீர்க்கமான முடிவுகளை மேற்கொள்ளுமாறு சமூகத்திலிருந்து வலுவான கருத்துக்கள் எழுந்த போது மாவட்ட சுகாதார துறையின் அதிகாரிகள் மட்டத்தில் ஏற்பட்ட இழுபறிகள், முரண்பாடுகள் காரணமாக குறித்த ஆடைத்தொழிற்சாலை விடயம் நீதிமன்றம் வரை சென்றது. ஒரு சில இளநிலை வைத்திய அதிகாரிகள் தாங்கள் தங்களது கடமைகளை செய்வதற்கு உயர்மட்டத்தினால் விதிக்கப்பட்ட தடைகள் அல்லது தாங்கள் களநிலை அடிப்படையில் எடுத்த முடிவுகளை மாற்றியமைத்து உயர்மட்டத்தவர்களால் விடுக்கப்பட்ட உத்தரவுகள் குழப்பத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்தனர். இதன்; காரணமாக எழுந்த நெருக்கடியான சூழ்நிலையில் தகுதிவாய்ந்த அதிகாரிகள் சுகவீன விடுமுறையில் சென்றமையும் நடந்தேறியது.
ஏறச்சொன்னால் எருதுக்கு கோபம், இறங்கச் சொன்னால் முடவனுக்கு கோபம் என்ற கதையாய் நிலைமைகள் தொடர
கடந்த 13.08.2021 அன்று கிளிநொச்சியில் உள்ள ஒரு பிரதேச சபையிலிருந்து தமது வீட்டிற்கு உணவருந்தச் செல்லும் வழியில் பிரதேச சபை ஊழியர் ஒருவர் வீதியில் வீழ்ந்து விட்டதாக தெரியவந்ததும் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் நடந்துகொண்ட முறையானது மாவட்டத்தின் தற்போதைய நிலையினை துலாம்பரமாக்கி நிற்கிறது.
குறித்த பிரதேச சபை ஊழியர் நிலத்தில் வீழ்ந்ததும் அவரை உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல எவரும் முற்படவில்லை. மாறாக இவர் இறந்து விட்;டதாக தாமே முடிவெடுத்தது மட்டுமல்லாது ஊடகங்களும் அவ்வாறே செய்தி வெளியிட்டுவிட்டனர்.
சரி பொதுமக்கள் தான் அறியாமல் செய்தார்கள் எனில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் செய்ததை எந்த வகையில் சேர்ப்பது? குறித்த பிரதேச சபை ஊழியரை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல நோயாளர் காவு வண்டியைக் கோரியபோது குறித்த மாவட்ட வைத்தியசாலை நிர்வாகமானது ‘அது தமது பொறுப்பு அல்ல, குறித்த பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியே அதனைச் செய்ய வேண்டும்’ எனப் பதிலளித்துள்ளது.
பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியை தொடர்பு கொண்டபோது ‘அது தமது பொறுப்பு அல்ல காவல்துறையினரே நீதவானுடன் வந்து சடலத்தை எடுத்துச் செல்லவேண்டும்’ என்று பதிலளித்துள்ளார்.
வீதியில் மயங்கி விழுந்த எவராவது இறந்து விட்டார் என உறுதிப்படுத்துவது வைத்தியர்களது கடமையே தவிர வீதியால் போய் வருபவர்களது அலுவல் அல்ல. அவ்வாறு எவராவது வீதியில் விழுந்து கிடந்தால் அவர்களை வைத்தியசாலைக்கு உடனடியாக கொண்டு செல்வதே கிளிநொச்சியின்; வழக்கம். ஆனால் குறித்த பிரதேச சபை ஊழியர் விழுந்த இடத்திலேயே நான்கு மணிநேரத்திற்கு மேலாக எவ்வித மருத்துவ உதவிகளும் இன்றி விடப்பட்டிருந்தார்.
இது எதனைக் காட்டுகிறது?
கொரொனா பெருந்தொற்றானது உலகை உலுக்கத் தொடங்கி இரண்டு ஆண்டுகளை அண்மிக்கும் நிலையில், கொலராவிலிருந்து கொடிய யுத்தம் வரைக்கும் மக்களைக் காத்துவந்த வன்னிப்பிரதேச சுகாதாரத்தறையானது கொரனாவை எதிர்கொள்ள எவ்வித முனனாயத்தங்களும் இல்லாமல் காலத்தைக் கடத்துவதையே இது காட்டுவதாகப் பலரும் தெரிவிக்கின்றனர்.
கிளிநொச்சியின் அரச நிர்வாகத்தில் முக்கியமாக சுகாதாரத்துறைக் கட்டமைப்பில் தலைகீழாக நின்று மாற்றங்களைச் செய்தவர்கள்தான் இந்தச் செய்தியைக் கண்டு நிம்மதியும் மகிழ்ச்சியும் அடைவார்கள்.
கிளிநொச்சியில் சிஸ்டம் சரியில்லை என்று தமது பகுதி சிஸ்டத்தை புகுத்தியவர்கள் விரும்பியது தற்போது நிகழத்தொடங்கியிருப்பதையே மேலே விபரித்த சம்பவம் எமக்கு உணர்த்துகிறது.
கிளிநொச்சியின் சிஸ்டம் எப்போதும் மக்களுக்கும் மக்கள் பணியாளர்களுக்காவுமே இருந்தது. கொந்தராத்துக்கார்களுக்கும் கொமிசன் எடுப்பவர்களுக்கும் அதிகாரத்துவத்திற்கும் (டீரசநயரஉசயஉல) அங்கு இடம் இருக்கவில்லை.
வீதியில் வீழ்ந்து கிடந்த எவரையும் எவரும் தூக்கிக்கொண்டு வைத்தியசாலைக்கு ஓடும் பழக்கமே இங்கு வழக்கம்.
வைத்தியசாலைகள் ஒருபோதும் நோயாளர்காவுவண்டிகளை தர மறுத்ததாக வரலாறு இருக்கவில்லை. மாறாக மக்களுக்காக சென்று நோயாளர்காவு வண்டிகள் கிளைமோர் தாக்குதலுக்குள்ளான வரலாறே வன்னியின் வரலாறாக இருந்தது.
இதையெல்லாம் கடந்த பத்தாண்டுகளில் சிறிது சிறிதாக இல்லாது செய்தவர்களே பிரதேசசபை ஊழியரது இறப்பிற்குப் பதில் சொல்லவேண்டும். “வீதியில் மயங்கி வீழ்ந்த உறவினரை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றிருந்தால் அவரை காப்பாற்றியிருக்கலாம்” என தற்போது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதனை செய்யாது விட்டதற்காக அவர்கள் சட்டரீதியான நடவடிக்கைக்குச் சென்றால் பொறுப்புக் கூற வேண்டியவர்கள் தண்டனையை அனுபவிக்க வேண்டிவரும் என மனித உரிமைகள் ஆணைக்குழுவைச் சேர்ந்த ஒருவர் குறிப்பிட்டார். “சுகாதார துறைக்குள் இருக்கின்றவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையை நோக்கி இருப்பதன் விளைவே இது” என்றார் பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு சுகாதார அலுவலர்.
ஆக மொத்தத்தில் கொரானா பேரிடர்காலத்தில் ஒருவர் வீதியில் விழுந்தால் அவரை வைத்தியசாலையில் சேர்ப்பது எப்படி? என்ற முன்னாயத்தப் பொறிமுறையை கிளிநொச்சியில் உருவாக்கியிருக்க வேண்டிய பொறுப்பு வாய்ந்தவர்கள் வாளாதிருந்திருக்கிறார்கள்; என்பது தற்போது வெளிப்பட்டிருக்கிறது.
இன்று பிரதேச சபை ஊழியர். நாளை இது எம்மில் எவருக்கும் நடக்கலாம்.
தேசிய பேரிடர் நிலமைகளில் பிராந்திய (மாவட்ட) மற்றும் பிரதேச மட்டங்களில் அந்த அந்தப் பகுதிகளின் கள நிலவரங்களின்படி தினசரி அல்லது வாராந்தம் பேரிடர் முகாமைத்துவக் கலந்துரையாடல் செய்யப்படுவது வழமை. ஆனால் கிளிநொச்சி மாவட்டத்தில் இறுதியாக அது எப்போது இடம்பெற்றது என்றே தெரியவில்லை ஒரு மேசையிலிருந்து கூடி கதைத்து திட்டமிட்டு பணியாற்ற வேண்டிய தரப்புக்கள் ஒவ்வொரு திசையை நோக்கி முகங்களை திருப்பிக்கொண்டு செல்கின்றார்கள்.
கொரனா என்பது ஒரு சர்வதேச பெருந்தொற்று. உயிரியல் அனர்த்தம் (டீழைடழபiஉயட னுளையளவநச). இது தற்போது இலங்கை முழுவதும் தாக்கம் செலுத்தும் ஒரு பேரிடர். இந்தக் கொரனாப் பேரிடரினை எவ்வாறு நேர்கொண்டு மக்களைக் காக்க வேண்டும் என்பது குறித்து பல்வேறு வழிகாட்டல்கள் உலக சுகாதார நிறுவனத்திலிருந்து மத்திய சுகாதார அமைச்சு ஈறாக வெளியிடப்பட்டடு வருகின்றன. இவைகள் கூட பிராந்திய மற்றும் பிரதேச மட்ட செயற்பாடுகள் கூட்டிணைக்கப்படவேண்டியது குறித்தும், அந்த மட்டங்களில் கொரனா செயலணிகள் கிரமமாக கூடிக் கலந்துரையாடி களநிலவரங்களின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படவேண்டும என வழிகாட்டுகின்றன.
இந்த நிலையில் கிளிநொச்சியில் உள்ள சுகாதார உத்தியோகத்தர்களிடம் இவ்வாறான கலந்துரையாடல்கள் கிரமமாக இடம்பெறுகின்றனவா எனக் கேட்டால் இல்லை என்ற பதிலே கிடைக்கிறது.
இதற்கு என்ன காரணம் என்று கேட்டால், சுகாதார உயரதிகாரிகளுக்கிடையில் நிலவும் உள்ளக முரண்பாடுகள் காரணமாக ஒழுங்கமைக்கப்பட்ட வகையில் களமுனைத் தரவுகளை பகுத்து ஆய்வு செய்து செல்நெறி மற்றும் செயற்பாடுகள் குறித்து முடிவெடுக்கும் கலந்துரையாடல்கள் எவையும் கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெறுவதில்லை என்றே கூறுகின்றனர்.
கிளிநொச்சி மாவட்டம் தற்போது நாட்டிலேயே அதிகூடியளவு கொரான பரவல் வீதத்தை கொண்டிருந்த போதும், இதனை எதிர்கொள்வது குறித்த முன்னாயத்தங்களோ அல்லது செயற்திட்டங்களோ இல்லாது தீ எழும்போது அணைப்பது போல (குசைந கiபாவiபெ) அந்த அந்த நாளில் எதிர்கொள்ளும் விடயங்களை கையாண்டால் சரி என்ற அடிப்படையிலேயே சுகாதாரதுறை நிர்வகிக்கப்படுகிறது என ஊழியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
செய்யவேண்டிய செயற்பாடுகள் குறித்தோ அல்லது செய்யும் செயற்பாடுகளது நிறைகுறைகள் குறித்தோ தமது மாவட்ட மேலதிகாரிக்கு தெரிக்கத் தயங்கும் ஒரு கலாசாரம் மாவட்ட சுகாதாரத்துறையில் வளர்ந்து வருகிறது. அவ்வாறு எவராவது தெரிவித்தால் அப்படி தெரிவிப்பவர் ‘சதிகாரர்’ என்றும் ‘தமக்கெதிராக சூழச்சி வலை பின்னுபவர்’ என்றும் ‘எவரோ ஒருவரது தூண்டுதலில் செயல்படுகிறார்’ என்றும் உயரதிகாரிகள் முத்திரை குத்தி பழிவாங்கல்களில் ஈடுபட எத்தனிப்பதால் ‘எவர் எக்கேடு கெட்டால் என்ன நாம் பிழைத்துப்போனால் சரி’ என்ற அளவில் சுகாதாரப்பணியாளர்கள் செயற்பட்டு வருகின்றனர். இது ஆரோக்கியமானது அல்ல என்கிறார் மாவட்டத்தின் அனுபவம் வாய்ந்த ஒரு பணியாளர்.
அதிகாரிகளிடத்தே இவ்வாறு காணப்படுகின்ற உள்ளக முரண்பாடுகள் காரணமாக அங்கு நிலவுகின்ற பலம் பலவீனங்களை பயன்படுத்தி ஒரு தரப்பு ஊழல் முறைகேடுகளில் ஈடுப்பட்டு வருகின்றது
இதனிடையே சுகாதார துறைக்குள் சாரதிகள், சுகாதாரப் பணி உதவியாளர்கள் உள்ளிட்ட பணியாளர்களின் இடமாற்ற விடயத்திலும் அதிகாரிகள் நடந்து கொண்டு விதம் மாவட்ட சுகாதாரதுறையின் பின்னடைவு க்கு இன்னொரு காரணமாக அமைந்துள்ளன.
எனவே மேற்சொன்ன குழப்பங்களின் ஒட்டுமொத்த விளைவுகளில் ஒன்றுதான் வீதியில் விழுந்து கிடந்து உயிருக்குப்போராடிய பிரதேச சபை ஊழியர் நடுவீதியிலேயே நான்கு மணி நேரத்திற்கு மேலாக விடப்பட்டமையாகும். கிளிநொச்சி மாவட்டத்தில் முதலாவது கோரோனா நோயாளி 07.11.2020 அடையாளம் காணப்பட்ட நாள் தொடக்கம் கடந்த மாதம் 31 திகதி வரை 1400 தொற்றாளர்கள். அடையாளம் காணப்பட்டனர்.
ஆனால் இந்த மாதம் ( ஓகஸ்ட்) முதல் 17 நாட்களில் மாத்திரம் 1503 தொற்றாளர்களுக்கு மேல் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் தொற்றாளர்களின் எண்ணிக்கை நூறை கடந்து வருகிறது. கடந்த 04.08.2021 அன்று இலங்கை தொற்றுநோய் விஞ்ஞானப்பிரிவினரால் வெளியிடப்பட்ட தரவுகளில் கிளிநொச்சி மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலகர் பிரிவுகளும் கொரனா அதிஅபாய (சிவப்பு) வலயங்களாக இனங் காட்டப்பட்டுள்ள நிலையில் கடந்த சில தினங்களாக தினமும் பாரிய அளவில் கொரனா நோயாளர்கள் கிளிநொச்சியில் கண்டறியப்பட்டு வருகின்றனர
மாவட்ட சுகாதார ஆளணியினர் இரவு பகல் பாராது கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதால் உள மற்றும் உடற்சோர்வுகளுக்கு (டீரசn ழரவ) ஆளாகியுள்ள இத்தருணத்தில் அதிகாரிகளின் உள்ளக முரண்பாடுகள் மற்றும் பொருத்தமற்ற முடிவுகள் காரணமாக அர்ப்பணிப்புடன் பணியாற்றுகின்றவர்கள் அனைவரும் விரக்திக்குள் தள்ளப்படுகின்ற நிலமையே காணப்படுகிறது. இதனால் அவர்களின் வினைத்திறனான சேவை பாதிக்கப்படுகிறது. அது இறுதியில் இந்த மாவட்டத்தின் அப்பாவிப் பொதுமக்களையே பாதிக்கிறது.
ஏனுnவு மேற்படி அவதானிப்புகளின் படி நோக்கினால் மாவட்ட சுகாதார துறையின் சிஸ்டத்தில் குறைபாடு நிலவுகிறது என்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளது. எனவே இந்த சிஸ்டத்தின் குறைபாடுகளை நிர்வத்தி செய்யாது விட்டால் திருநகர் வீதியில் வீழ்ந்து கிடந்து இறந்த பிரதேச சபை பணியாளர் போல மாவட்டத்தின் எல்லா வீதிகளிலும் பலர் வீழ்ந்து மீட்பதற்கு ஆளின்றி மாள்வார்கள்.
Discussion about this post