செஞ்சோலை படுகொலை தினத்தின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் தினம் இன்றாகும்.
எனினும் படுகொலை நடந்த இடத்தில் இறந்த பிள்ளைகளுக்கு அஞ்சலி செலுத்த,
பெற்றோருக்கு இராணுவத்தினரும் பொலிஸாரும் தடை விதித்துள்ளனர்.
மேலும் முல்லைத்தீவு- வள்ளிபுனம் பகுதியிலுள்ள செஞ்சோலை பகுதியில்
பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் புலனாய்வுத்துறையினர் உள்ளிட்ட பலரும்
பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று (சனிக்கிழமை) காலை, உயிரிழந்த மாணவிகளின் பெற்றோர்
சிலர், அங்கு வருகை தந்திருந்த போதிலும், பொலிஸாரும் இராணுவத்தினரும்
அந்த வளாகத்திற்குள் செல்வதற்கு அவர்களுக்கு அனுமதி வழங்கவில்லை.
குறித்த சம்பவம் தொடர்பாக உயிரிழந்த மாணவிகளின் பெற்றோர்கள்
தெரிவித்துள்ளதாவது, “எங்களது பிள்ளைகள் உயிரிழந்த இடத்தில்
தனித்தனியாகச் சென்று கூட அஞ்சலி செலுத்துவதற்கு தடை
விதிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய நிலைமை எதிர்வரும் காலங்களில் இருக்க கூடாது. அடுத்த வருடமாவது,
எங்களது பிள்ளைகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட
வேண்டும்” என அவர்கள் தங்களது ஆதங்கத்தினை வெளிப்படுத்தினர்.
கடந்த 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் 14ஆம் திகதி, முல்லைத்தீவு- வள்ளிபுனம்
பகுதியிலுள்ள செஞ்சோலை சிறுவர் இல்ல வளாகம் மீது விமானப் படை நடத்திய
தாக்குதலில் 54 மாணவிகள் உட்பட 61 பேர் கொல்லப்பட்டனர். 129இற்கும்
அதிகமான மாணவிகள் அவயவங்களை இழந்தமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post