தற்போதைய பொருளாதார நெருக்கடியானது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் (Ranil Wickremesinghe) உருவாக்கப்பட்டதாகவும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே (Gotabaya Rajapaksa) அதற்கு பலியாகியதாகவும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
கேகாலை (Kegalla) – ருவன்வெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.
சர்வதேச இறையாண்மை பத்திரத்திலிருந்து (ISB) இலங்கை 15.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுள்ள நிலையில், அதில் மகிந்த ராஜபக்ச காலத்தில் 3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மாத்திரமே பெறப்பட்டதாகவும், மீதி 12.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் 2015 இல் ரணில் விக்ரமசிங்கவின் நான்கு வருட நல்லாட்சி அரசாங்கத்தின் போது பெறப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
டொலர் கையிருப்பு
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அநுர குமார, “ராஜபக்ச காலத்தில் பெறப்பட்ட 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை ஏற்கனவே செலுத்தியுள்ளது.
2015 ரணில் விக்ரமசிங்கே காலத்தில் பெற்ற 12.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை இன்னும் செலுத்த உள்ளது.
அந்த கடனைத் தீர்க்கத் தவறியதால் இலங்கையின் டொலர் கையிருப்பு குறைந்தது. எந்த சர்வதேச நிறுவனமும் எங்களுக்கு கடன்களை வழங்கவில்லை.
எமது கையிருப்புக்கள் தீர்ந்து போனதால், எனவே, அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, மத்திய வங்கியில் டொலர் கையிருப்பை செலவழிக்க வேண்டியிருந்தது, அந்த கையிருப்பும் தீர்ந்து போனது.
ரணிலின் பதவியேற்பு
பின்னர், எங்களால் எரிபொருள் மற்றும் எரிவாயுவை வாங்க முடியவில்லை, இதனால் எரிபொருள் மற்றும் எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்டது, இதன் விளைவாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
அப்படித்தான் பொருளாதார நெருக்கடி உருவானது. ரணில் விக்ரமசிங்கவினால் ஏற்பட்ட நெருக்கடியில் கோட்டாபய மட்டுமே பலியாகினார்.
கோட்டாபய பதவியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து ரணில் விக்ரமசிங்க பதவியேற்ற பின்னர், ரணில் செய்தது கடனைச் செலுத்துவதை நிறுத்திவிட்டு, கடனைச் செலுத்தாததால் சேமிக்கப்பட்ட டொலரில் எரிபொருள் மற்றும் எரிவாயுவைக் கொள்வனவு செய்தமை மாத்திரமே” என்றார்.
Discussion about this post