தமிழ் மக்கள் தனித்துவமான பிரச்சினைகளுடன் தங்களுக்கான நீதியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என இலங்கைத்தீவிற்கு மட்டுமல்ல முழு அகிலத்திற்கும் உணர்த்த ஒன்றாய் சங்கு முழங்க தமிழர்களே அணி திரளுங்கள் என ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு அறைகூவல் விடுத்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது குறித்து வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது
“இன்னும் ஐந்து தினங்களில் ஒட்டுமொத்த வடகிழக்கின் தமிழரும் ஒரு தேசமாக தம் உணர்வுகளை வெளிப்படுத்த தயாராகிவிட்டதை தமிழ் கிராமங்கள், நகரங்களிலிருந்து வரும் தமிழராய் ஒருமித்து திரண்டெழும் உணர்வு வெளிப்பாடுகள் பறைசாற்றி நிற்கின்றன.
தமிழ் பொது வேட்பாளர்
எம் எதிர்கால நல்வாழ்விற்கு எம் சவால்களை ஒருமித்து எதிர்கொண்டு வெற்றி கொள்ள எம் சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்கும் பயணத்தில் புதிய அத்தியாயத்தை எதிர்வரும் சனியன்று ஒட்டுமொத்தமாக தமிழ் பொது வேட்பாளர் பா. அரியநேத்திரனுக்கு (P. Ariyanethiran) அதாவது சங்கு சின்னத்திற்கு வாக்களிப்பதன் ஊடாக நிலைநாட்டுவோம்.
எதிர்கால தமிழ் தேசிய அரசியல் புதிய செல்நெறியில் மக்களின் முழுமையான முதன்மை பங்கேற்புடன் விலைபோகாத, தடம் மாறாத மக்களின் அவலங்களை சிந்திக்கின்ற உரிமைகளை வென்றெடுப்பதற்கான அர்ப்பணிப்பும் தமிழ்த்தேசிய இருப்பை நிலைநிறுத்தும் வழி வரைபடத்தில் இயங்கும் வகையிலான அரசியலாளர்களால் முன்னெடுக்கப்பட வேண்டும்.
தமிழ் தேசிய பற்றுறுதி
இதற்காக இதயசுத்தியான தமிழ் தேசிய பற்றுறுதியும் செயற்பாட்டு வினைத்திறனும் கொண்ட கட்சிகளை கடந்த மனிதர்களின் நிபுணத்துவ வழிப்படுத்தலை வழங்கும் பொதுக்கட்டமைப்பு ஒன்று இயங்கும் வண்ணம் நமக்காக நாமே சங்கிற்கு வாக்களிப்போம்.
தமிழராய் திரண்டு தனித்துவ மக்கள் குழுமமாக இத்தீவில் தலைநிமிர்வோம் எங்கள் வாழ்வும் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு.“ என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post