ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்கள் முடிவடைந்த பின்னர் 48 மணித்தியாலங்கள் அமைதியான காலப்பகுதியில் வேட்பாளர் பிரசாரம் மற்றும் சமூக ஊடகங்களில் சேறு பூசுவதை நிறுத்துவதற்கான விரிவான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தேர்தல்கள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது.
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு மற்றும் சமூக ஊடக வலையமைப்பைச் சேர்ந்த நிறுவனங்களுடன் இணைந்து இந்தத் திட்டத்தை தயாரிப்பதில் கவனம் செலுத்தியுள்ளதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.இவ்வருடம் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்கள் எதிர்வரும் 18ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைவதோடு, 19ஆம் மற்றும் 20ஆம் திகதிகளில் அமைதியான காலகட்டமாக இருக்கும்.
இந்த காலப்பகுதியில் பிரச்சாரம் செய்வது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ள போதிலும் சமூக வலைத்தளங்கள் ஊடாக பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சமூக ஊடக குழுக்களுடன் கலந்தாலோசித்த பின்னர் மௌன காலத்தில் தேர்தல் பிரசாரம் மற்றும் அவதூறு பரப்புரைகளை நிறுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீவிர முயற்சிகளை மேற்கொள்ளும் என ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்சாரங்களில் பெரும்பாலானவை வெளிநாடுகளில் இருந்து செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.அந்த நிறுவனங்களுடன் கலந்துரையாடி சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட அவதூறு பிரச்சாரங்கள் போன்றவற்றை நீக்குவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தலைவர் குறிப்பிட்டார்.அமைதியான காலத்தில் சமூக வலைத்தளங்களில் மேற்கொள்ளப்படும் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையம் அமைப்பு ஒன்றை தயாரித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post