பொலித்தீன்களின் ஊடாக உற்பத்தி செய்யப்படும் உக்காத லன்சீட் வகைகளை விற்பனை செய்வதற்கான மற்றும் பயன்படுத்துவதற்கான தடை இன்று முதல் இலங்கையில் அமுலாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை அமைச்சர் மஹிந்த அமரவீர அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வைத்து வெளியிட்டடிருந்தார்.
உணவு வகைகளை சுற்றுவதற்காக பயன்படுத்தப்படும் மக்காத பொலித்தீன் (லன்சீட்) உற்பத்தி செய்தல் மற்றும் விநியோகித்தல் போன்ற நடவடிக்கைகள் எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதியில் இருந்து தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.
என்றாலும் தற்போது உற்பத்தி செய்திருக்கும் தொகையை விற்பனை செய்வதற்காக ஒருமாத நிவாரண காலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதன் பின்னர் உற்பத்தி, விற்பனை மற்றும் பாவனை செய்ய முடியுமாக இருப்பது மக்கும் லன்சீட் மாத்திரமாகும்.
அதேபோன்று தடைசெய்யப்படும் இவ்வாறான லன்சீட் வகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றதா என தேடி பார்ப்பதற்காக மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் நுகர்வோர் சேவை அதிகாரசபையினால் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படும்.
தடை உத்தரவை மீறி யாராவது அதனை உற்பத்தி செய்தல் மற்றும் விநியோகித்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டால், அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதற்கு மேலதிகமாக பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் ஆகியவற்றினால் தயாரிக்கப்படும் 8 உற்பத்தி பொருட்களின் பாவனையை உடனடியாக தடை செய்வதற்காக தயாரிக்கப்பட்ட பட்டியலை அமைச்சரவை முன்வைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, பிளாஸ்ரிக்கினால் தயாரிக்கப்படும் கத்தி, கரண்டி, முள்கரண்டி, ஊதுபத்தி சுற்றுவதற்கு பயன்படுத்தப்படும் பொலித்தீன், உரிய பருமைக்கும் குறைவான பொலித்தீன்கள், பிளாஸ்ரிக் உற்பத்தியிலான பூமாலைகள், இடியப்பத் தட்டுக்கள் மற்றும் கோப்பைகளும் தடை செய்வதற்கான பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post