சமூக ஊடக செயலியான டெலிகிராமின் நிறுவனரும் பெரும் கோடீஸ்வருமான பாவெல் துரோவ், பிரான்ஸ் விமான நிலையம் ஒன்றில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
பாவெல் துரோவ் கைது
பாரிஸ் நகருக்கு வெளியே Bourget விமான நிலையத்தில் வைத்தே பாவெல் துரோவ் சுற்றிவளைக்கப்பட்டு கைதாகியுள்ளார்.
இலவசமாக பயன்படுத்தப்படும் டெலிகிராம் செயலியானது பயனர்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் விதிப்பதில்லை என்பதால் வன்முறையை தூண்டும் நடவடிக்கைகள் பல குறித்த செயலி ஊடாக முன்னெடுக்கப்படுகிறது என்றே குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
துரோவ் கைது நடவடிக்கை தொடர்பில் டெலிகிராம் நிர்வாகம் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. பிரான்ஸ் உள்விவகார அமைச்சகம் மற்றும் பொலிசார் தரப்பிலும் கருத்தேதும் பதிவு செய்யப்படவில்லை.
ஆனால் ரஷ்ய வெளிவிவகார அமைச்சகம் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுத்துள்ளதாகவே கூறப்படுகிறது. நடந்த சம்பவம் உறுதி செய்யப்பட்டு மேற்கத்திய அரசு சாராத அமைப்புகள் ஊடாக துரோவ் விடுதலைக்கு முயற்சிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
ரஷ்யாவில் பிறந்த 39 வயதான துரோவ் டெலிகிராம் செயலியின் நிறுவனரும் உரிமையாளருமாக உள்ளார். அடுத்த ஓராண்டுக்குள் டெலிகிராம் செயலியை ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து பயன்படுத்தும் 1 பில்லியன் பயனர்களை உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.
கோரிக்கையை ஏற்க மறுப்பு
ரஷ்யா, உக்ரைன் மற்றும் முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளில் டெலிகிராம் செயலியானது மிகவும் பிரபலமான சமூக ஊடகமாகும். ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கியதன் பின்னர் மிக ரகசியமான பல தகவல்களும் டெலிகிராம் செயலியில் பகிரப்பட்டது.
மட்டுமின்றி, ரஷ்யா மற்றும் உக்ரைன் தரப்பும் மிக அதிகமாக டெலிகிராம் செயலியை பயன்படுத்தத் தொடங்கினர். 2014ல் தனது VKontakte சமூக ஊடகம் தொடர்பில் ரஷ்ய அரசாங்கத்தின் கோரிக்கையை ஏற்க மறுத்ததை அடுத்து நாட்டை விட்டு வெளியேறினார்.
இவரது மொத்த சொத்து மதிப்பு என்பது 15.5 பில்லியன் அமெரிக்க டொலர் என்றே கூறப்படுகிறது. 2017 முதல் டெலிகிராம் நிறுவனம் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் மாகாணத்தில் இருந்தே இயங்கி வருகிறது.
2021 முதல் துரோவ் பிரான்ஸ் குடிமகன் என்றே ரஷ்யா மற்றும் பிரான்ஸ் ஊடகங்கள் கூறியுள்ளன. சுதந்திரமாக இருக்க விரும்புவதால், தம்மிடம் பணம் மற்றும் பிட்காயின் மட்டுமே உள்ளது என்றும், சொத்துக்களோ, விமானம் அல்லது சொகுசு படகு என எதுவும் இல்லை என்றும் துரோவ் குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post