பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துக்கோரல இன்று(21) அறிவித்துள்ளார்.பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றின் ஊடாக அவர் இதனை தெரிவித்தார்.தமது கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதி தலைவரும் அரசியல் எதிரிகளாக மாறி ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாக அவர் கூறியுள்ளார்.ஏனைய அனைவரும் இணைந்து செயற்பட முயற்சி எடுக்கப்படும் தீர்மானமிக்க சந்தர்ப்பத்தில், தமது முகாமை சேர்ந்த தரப்பினர் இருவர் பிரிந்து நின்று போட்டியிட மேற்கொண்ட தீர்மானத்துடன் மனசாட்சிக்கமைய தம்மால் இணங்கமுடியாதெனவும் அவர் தனது விசேட உரையில் குறிப்பிட்டார்.இருவரும் இருவேறு தரப்பில் போட்டியிட மேற்கொள்ளப்பட்ட தீர்மானமானது, இதயபூர்வமற்ற மற்றும் நாட்டின் எதிர்காலம் குறித்து சிந்திக்காது மேற்கொள்ளப்பட்ட தூரநோக்கற்ற தீர்மானமாகுமென தலதா அத்துகோரல பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.அதனை வரலாறு மிக விரைவில் நிரூபிக்கும் எனவும் தாம் தொடர்ந்தும் அமைதி காக்கும் பட்சத்தில், அந்த பாவச்செயலுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பங்களிப்பு வழங்கிய ஒருவராக மாற வேண்டிய நிலைமை ஏற்படுமென அவர் குறிப்பிட்டார்.ஆகவே இந்த சிக்கலான விடயம் தொடர்பில் தாம் உடனடியாக தீர்மானம் மேற்கொள்வது அவசியமெனவும் அது இந்த நாட்டிற்கும் மக்களுக்கும் முன்மாதிரியாக அமைவது அவசியமெனவும் தலதா அத்துகோரல தெரிவித்தார்.அதற்கமைய, தாம் மேற்கொண்டுள்ள தீர்மானம், தமக்கு வாக்களித்த மக்களின் எதிர்காலத்திற்கெதிரான தீர்மானமாக அமையாது என தாம் நம்புவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவது தமக்கு சுமையான ஒரு விடயமல்ல எனவும் இன்று அந்த தீர்மானமிக்க சந்தர்ப்பத்தை தான் எதிர்கொண்டுள்ளதாகவும் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்
Discussion about this post