பங்களாதேஷில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களை உடனடியாக விடுவிக்க அந்நாட்டு ஜனாதிபதி மொஹம்மட் ஷபாபுதீன் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி தடுத்துவைக்கப்பட்டுள்ள பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் கலீடா ஷியா மற்றும் மாணவ செயற்பாட்டாளர்களை உடனடியாக விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பங்களாதேஷ் இராணுவ அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரதிநிதிகளின் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக பங்களாதேஷ் முழுவதும் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் அந்நாட்டு எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட 10,000 பேர் வரை கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, பங்களாதேஷில் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படுமெனவும் விரைவில் தேர்தல் நடத்தப்படுமெனவும் குறித்த கலந்துரையாடலின்போது ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அத்துடன், அமுலிலுள்ள ஊரடங்குச் சட்டத்தை நீக்குவது குறித்து தற்போது கவனம் செலுத்தப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
எவ்வாறாயினும், வன்முறைகளை கைவிடுமாறும் தீர்க்கமான முடிவொன்று அறிவிக்கப்படுமெனவும் பங்களாதேஷ் இராணுவத்தளபதி கூறியுள்ளார்.
ஆர்பாட்டக்காரர்களின் கோரிக்கையாகவுள்ள அரச வேலைவாய்ப்பு இட ஒதுக்கீட்டு முறைமை திருத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகியதோடு இந்தியாவில் தங்கியிருப்பதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் ஐரோப்பிய நாடொன்றில் அரசியல் தஞ்சம் கோர தயாராகி வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
பங்களாதேஷை நீண்டகாலம் ஆட்சி செய்துவரும் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டுமென்ற முக்கிய கோரிக்கையை முன்வைத்து மாணவ தலைவர்களினால் சிவில் ஒத்துழையாமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
ஷேக் ஹசீனா 2009 ஆம் ஆண்டிலிருந்து பங்களாதேஷின் பிரதமராக செயற்பட்டுவந்தார்.
இந்நிலையில் அரசாங்க வேலை வாய்ப்புக்கான இட ஒதுக்கீட்டு முறைமையை இரத்துச் செய்யுமாறும் பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவி விலகுமாறு வலியுறுத்தியும் கடந்த மாதம் முதல் மாணவர்களினால் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுவந்தன.
ஆர்ப்பாட்டங்களில் இதுவரை 300 பேர் உயிரிழந்ததுடன் கடந்த 04 நாட்களில் மாத்திரம் 100 பேர் உயிரிழந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன
Discussion about this post