பங்களாதேஷில் மீண்டும் ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்றுள்ள நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 91 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 14 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளடங்குகின்றனர். ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் அவாமி லீக் கட்சியின் ஆதரவாளர்களுக்கும் இடையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. மாணவ தலைவர்களினால் அரசாங்கத்திற்கு எதிராக சிவில் ஒத்துழையாமை போராட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ள சூழலில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸாரால் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் நேற்றிலிருந்து(04) ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அரசாங்க வேலை வாய்ப்புக்கான இட ஒதுக்கீட்டு முறைமையை இரத்துச் செய்யுமாறும் பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவி விலகுமாறு வலியுறுத்தியும் கடந்த மாதத்திலிருந்து மாணவர்களால் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பிரதமரின் அவாமி லீக் கட்சியின் ஆதரவாளர்களுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் கடந்த மாதத்தில் மாத்திரம் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக பங்களாதேஷ் ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட சுமார் 10,000 பேர் தடுத்துவைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
Discussion about this post