மன்னார் (Mannar) மாவட்ட பொது வைத்தியசாலையில் உயிரிழந்த இளம் குடும்பப் பெண்ணின் மரணம் தொடர்பாக உரிய தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அந்த வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அஸாத் எம் ஹனீபா தெரிவித்துள்ளார்.
கடந்த 27 ஆம் திகதி பட்டதாரியான மரியராஜ் சிந்துஜா என்ற 27 வயதான இளம் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு கட்ட விசாரணைகள் இடம்பெற்று வருவதோடு பல்வேறு தரப்பினராலும் வன்மையான கண்டனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை குறித்த பெண்ணின் மரணம் சம்பவ தினம் நோயாளர் விடுதியில் இருந்த வைத்தியர் மற்றும் பணியாளர்களின் அசண்டையீனம் காரணமாக இடம்பெற்றுள்ளதாக பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினருடன் கலந்துரையாடல்
குறித்த மரணம் தொடர்பில் நீதியான விசாரணைகள் இடம்பெற்று உரிய வைத்தியர் மற்றும் கடமையில் இருந்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்றைய தினம் (4) நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு விஜயம் செய்து வைத்தியசாலையின் பணிப்பாளர் மற்றும் வைத்தியர்களுடன் இணைந்து கலந்துரையாடலை மேற்கொண்டார்.
இதன் போது கடந்த வெள்ளிக்கிழமை இரவு வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி நுழைந்து பெண்கள் மகபேற்று விடுதிக்குள் பணியாற்றிய வைத்தியருக்கு இடையூறு விளைவித்ததுடன் வைத்தியசாலை நிர்வாகத்திற்கு இடையூறை ஏற்படுத்தியதாக கூறப்பட்ட வைத்தியர் அர்ச்சுனாவின் (Ramanathan Archchuna) செயற்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.
சட்ட நடவடிக்கைமேலும் குறித்த பெண்ணின் மரணம் குறித்து நீதியான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் உரிய தரப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு மக்கள் மத்தியில் இந்த வைத்தியசாலை மீது உள்ள அவநம்பிக்கை தகர்த்தெறியப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தார்.
அத்துடன் உயிரிழந்த இளம் குடும்பப் பெண் மரணம் தொடர்பாக பல்வேறு கட்ட விசாரணைகள் இடம்பெற்று வருவதோடு, குறித்த சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணை முடிவடைந்த நிலையில் உரிய தரப்பினருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அஸாத் எம் ஹனீபா நாடாளுமன்ற உறுப்பினரிடம் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post