மன்னார் காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தின் நிர்மாணிப்பணிகளை அதானி நிறுவனத்திற்கு வழங்குவதற்கு எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தை வலுவிழக்கச்செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட 5 அடிப்படை உரிமை மனுக்களை எதிர்வரும் ஒக்டோபர் 14ஆம் திகதி விடயங்களை ஆராய்வதற்காக எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் இன்று(02) உத்தரவிட்டுள்ளது.
எஸ்.துரைராஜா, ஏ.எச்.எம்.டி.நவாஸ், ஷிரான் குணரத்ன, அச்சல வெங்கப்புலி ஆகிய நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் உள்ளிட்ட சமூக அமைப்புகளால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
மத்திய ஆசிய பறவைகள் பாதையின் தென்திசையிலுள்ள பறவைகளின் தங்குமிடமான இலங்கை, புலம்பெயர் பறவைகளின் கேந்திர நிலையமாக காணப்படுவதாக மனுதாரர்கள் தமது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சுமார் ஒரு மில்லியன் வரையான பறவைகள் குளிர்காலத்தின் போது இந்த பகுதிக்கு வருகை தருவதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பறவைகளின் பாதையில் ஏதேனும் இடையூறு ஏற்பட்டால், புலம்பெயர் பறவைகளின் செயற்பாடுகளுக்கு குறிப்பிடத்தக்க பாதிப்பு ஏற்படுமென மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காற்றாலை திட்டத்திற்கு அரசியல், வெளிப்புற காரணிகளின் அடிப்படையில் மன்னார் தீவு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறித்த தீவை தெரிவுசெய்வதற்கு விஞ்ஞான ரீதியான அல்லது வேறு எவ்வித விசேட காரணங்களும் இல்லை எனவும் குறித்த நிலப்பரப்பு மிகவும் உணர்திறன் மிக்க சுற்றுச்சூழல் பகுதி என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post