தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு ஆக்கபூர்வமான தீர்வு காண்பதற்கான விசேட பேச்சுவார்த்தை ஒன்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கடவிற்கும் இடையில் இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில் கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்றுப் பிற்பகல் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி, “மாகாண சபைத் தேர்தல் சட்டமூலம் உடனடியாக நாடாளுமன்றத்துக்குக் கொண்டு வந்து நிறைவேற்றப்படும்.
இது தொடர்பில் சுமந்திரன் தனிநபர் பிரேரணையாகச் சமர்ப்பித்துத் தயாராக இருக்கும் சட்டமூலம் வரும் ஓகஸ்ட் 22, 23ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படும்.
தனிநபர் சட்டமூலம்
சுமந்திரன் சமர்ப்பித்துள்ள தனிநபர் சட்டமூலம் ஏற்கனவே வர்த்தமானியில் பிரசரிக்கப்பட்டு, உயர் நீதிமன்றத்தால் பரிசீலிக்கப்பட்டு, நிறைவேற்றப்படுவதற்கு தயாரான நிலையில் உள்ளது.
அந்தச் சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டி உள்ள சில திருத்தங்களுடன் அதனை உடனடியாக நடைமுறைக்குக் கொண்டு வந்து நிறைவேற்றினால், ஜனாதிபதித் தேர்தல் முடிந்த கையோடு மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியும்.
மாகாண சபைகளில் இளைஞர், யுவதிகளுக்கு போதிய பிரதிநிதித்துவம் வழங்குவதை உறுதிப்படுத்தல், எம்.பிக்களும் அப்பதவியில் இருந்து கொண்டே மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட வகை செய்தல் ஆகிய திருத்தங்கள் இந்தச் சட்டமூலத்துக்குச் செய்யப்பட வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.
பதில் வழங்கிய சுமந்திரன்
இதற்கு பதில் வழங்கிய சுமந்திரன், சட்டமூலத்தின் குழு நிலை விவாதத்தின்போது சட்டமா அதிபரின் இணக்கத்துடன் அந்த மாற்றங்களைக் கொண்டுவர முயற்சிக்கலாம் என சுட்டிக்காட்டியுள்ளார்.
தாம் சமர்ப்பித்துள்ள மாகாண சபைகள் தேர்தல் சட்டமூலத்தை வரும் 22, 23 ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் எடுத்து விவாதிப்பதற்கு அதனை நாடாளுமன்ற நிகழ்ச்சிப் பத்திரத்தில் சேர்த்துக் கொள்ளுமாறு தாம் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்தை கடிதம் மூலம் கோரியுள்ளதாகவும், அது இன்று நாடாளுமன்ற விவகாரங்களை ஆராயும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்பட இருப்பதாகவும், அதற்கு அரசுத் தரப்பில் ஆதரவு கிட்டினால் விடயத்தை அந்தத் திகதியில் எடுத்து சட்டமூலத்தை நிறைவேற்ற முடியும் என்றும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
Discussion about this post