இணையவழி விசா வழங்கும் வகையில் விமான நிலையத்தில் உருவாக்கப்படவுள்ள புதிய முறையினால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களான சம்பிக்க ரணவக்க, ரவுப் ஹக்கீம் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இந்த விடயம் தொடர்பில் உச்ச நீதிமன்றில் அடிப்படை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளனர்.
இந்த விசா முறைமையினால் நாட்டின் முக்கிய தகவல்கள் கசியும் அபாயம் காணப்படுவதாகவும் இது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மத்திய வங்கி மோசடி
தனிப்பட்ட ரீதியில் இந்த மனுக்களை குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்கல் செய்துள்ளதுடன் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர், சுற்றுலாத்துறை அமைச்சர், சட்ட மா அதிபர் மற்றும் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் இந்த மனுவின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
அத்தோடு, இணையவழி விசா குறித்த கொடுக்கல் வாங்கல் மத்திய வங்கி மோசடியை விடவும் நூறு மடங்கு பாரியளவிலானது என நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
சுற்றுலாப் பயணி
இந்தநிலையில், ஒரு சுற்றுலாப் பயணியிடம் 25 டொலர் அறவீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளதுடன் வெளிநாட்டு பிரஜைகள் மற்றும் இரட்டைக் குடியுரிமையுடைய இலங்கைப் பிரஜைகள் இணையவழி விசா பெற்றுக்கொள்ள 100 டொலர்களை செலுத்த வேண்டியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
மேலும், பிரபல நிறுவனமொன்றின் பெயரில் இந்த கொடுக்கல் வாங்கல் மேற்கொள்ளப்படும் நிலையில் உண்மையில் அந்த நிறுவனம் தொழில்நுட்ப உதவிகளை மட்டுமே வழங்குகின்றது என அவர் தெரிவித்துள்ளதுடன் சிறு நிறுவனமொன்று பாரியளவில் இந்த விசா முறையினால் இலாபமீட்டுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post