ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுவது அரசியலமைப்பிற்கு முரணானது என தீர்ப்பு வழங்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் தள்ளுபடி செய்ய உயர் நீதிமன்றம் இன்று(15) உத்தரவிட்டுள்ளது.
2015ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பிற்கமைய, அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டம் உரிய முறையில் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அதனை மக்கள் கருத்துக்கணிப்பினூடாக நிறைவேற்றுவது அவசியமென குறிப்பிடப்படவில்லை எனவும் உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் இன்று மீளவும் வலியுறுத்தியுள்ளது.
இந்த வழக்குக்கான 5 இலட்சம் ரூபா செலவை மனுதாரர் செலுத்த வேண்டுமெனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான அர்ஜூன ஒபேசேகர, பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சட்டத்தரணி அருண லக்சிறி உனவட்டுனவினால் இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் உரிய வகையில் நிறைவேற்றப்படாததால், பொதுமக்கள் கருத்துக்கணிப்பின் ஊடாக அது நிறைவேற்றப்படும் வரை, ஜனாதிபதி தேர்தலை நடத்துவது அரசியலமைப்பிற்கு முரணானது என தீர்ப்பு வழங்குமாறு மனுதாரர் கோரிக்கை விடுத்திருந்தார்.
அத்துடன் 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை மக்கள் கருத்துக்கணிப்பிற்கு உட்படுத்துமாறு பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு உத்தரவிடுமாறும் மனுதாரர் தமது மனுவில் கோரியுள்ளார்.
மனுவின் பிரதிவாதிகளாக தேர்தல்கள் ஆணைக்குழுவும் அதன் உறுப்பினர்களும் பாராளுமன்ற செயலாளர் நாயகமும் சட்டமா அதிபரும் பெயரிடப்பட்டிருந்தனர்.
Discussion about this post