களு கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ள நிலையில், மில்லக்கந்த பகுதிக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மறுஅறிவித்தல் வரையில் அரபிக்கடலுக்கு செல்ல வேண்டாமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது. அரபிக்கடல் பிராந்தியத்தில் மணிக்கு 70 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுமெனவும் இதனால் கடல் கொந்தளிப்பாக காணப்படுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை, இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்களின் சில பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய, மத்துகம, புளத்சிங்கள ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் இரத்தினபுரி மாவட்டத்தின் அயகம, எஹெலியகொட, எலபாத்த, கிரிஎல்ல, குருவிட்ட, இரத்தினபுரி ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நாட்டின் தென்மேற்கு பிராந்தியத்தில் எதிர்வரும் நாட்களில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மாவட்டத்திலும் 100 மில்லிமீட்டருக்கும் அதிகரித்த பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென கூறப்பட்டுள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு மலைசரிவுகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை, மொனராகலை மாவட்டங்களிலும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது.
Discussion about this post