நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து பொதுச்செயலாளராக கடமையேற்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு சென்றதையடுத்து அங்கு இன்று(05) முற்பகல் அமைதியின்மை ஏற்பட்டது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்துக்குள் பிரவேசிக்க முடியாதவாறு பிரதான வாயிலியில் பூட்டு போடப்பட்டிருந்தது.
குறித்த பகுதியில் பொலிஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.
தயாசிறி ஜயசேகரவுடன் இருந்தவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாக எமது செய்தியாளர்கள் கூறினர்.
பின்னர் தயாசிறி ஜயசேகர ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு வௌியில் ஆவணமொன்றில் கையெழுத்திட்டு பொதுச்செயலாளராக கடமையேற்றார்.
தயாசிறி ஜயசேகரவை ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்தும் கட்சி உறுப்புரிமையிலிருந்தும் நீக்குவதை இடைநிறுத்தி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தினால் கடந்த செவ்வாய்க்கிழமை இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை நிறைவுபெறும் வரை இந்த இடைக்கால தடையுத்தரவு அமுலில் இருக்கும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதன்மூலம் தயாசிறி ஜயசேகர ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக செயற்படுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது.
எவ்வாறாயினும், தயாசிறி ஜயசேகரவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்புரிமை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க நேற்றுமுன்தினம்(03) தெரிவித்தார்.
Discussion about this post