இரு தரப்பு கடன் மறுசீரமைப்பிற்கு இலங்கை இணங்கியதை போன்றே பிணை முறிகள் உள்ளிட்ட வணிகக் கடன் வழங்குநர்களுடன் இலங்கை விரைவில் உடன்பாட்டை எட்டும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) நம்பிக்கை வௌியிட்டுள்ளது.
சுமார் 10 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இரு தரப்பு கடனை மறுசீரமைப்பது தொடர்பாக நேற்று உத்தியோகபூர்வ கடன் குழு மற்றும் சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கியுடன் (EXIM) இலங்கை உடன்பாட்டை எட்டியது.
35 பில்லியன் டொலருக்கும் அதிகமான இலங்கையின் வௌிநாட்டுக் கடனில் 5.8 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை மறுசீரமைப்பிற்கு இந்தியா, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் இணை தலைமைத்துவம் வழங்கும் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழு பாரிஸ் நகரில் இணக்கப்பாட்டிற்கு வந்தது.
இணை தலைமை நாடுகளைத் தவிர, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஆஸ்திரியா, பெல்ஜியம், கனடா, டென்மார்க், ஜெர்மனி, கொரியா, நெதர்லாந்து, ஸ்பெயின், ரஷ்யா, ஸ்வீடன் மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகியவை உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவில் உள்ளடங்குகின்றன.
உத்தியோகபூர்வ கடன் வழங்கும் குழுவில் சீனா உள்ளடங்கவில்லை.
அவர்கள் மேற்பார்வையாளர்களாக கலந்துரையாடலில் பங்குபற்றிய போதிலும், ஏற்றுமதி-இறக்குமதி வங்கி ஊடாக வழங்கிய கடன்களுக்கான இணக்கப்பாடு பிரத்தியேகமாக ஏற்படுத்திக்கொள்ளப்பட்டன.
அதன்படி 4.2 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் மறுசீரமைப்பிற்கு சீனா நேற்று இணங்கியது.
இலங்கை அதிகாரிகள் பிணை முறிகள் மற்றும் வணிகக் கடன் வழங்குநர்களுடன் விரைவில் கலந்துரையாடி ஒரு உடன்பாட்டை எட்டுவார்கள் என்று எதிர்பார்ப்பதாக உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழு நேற்றைய உடன்படிக்கையின் பின்னர் அறிவித்தது.
தங்களுடன் இணக்கம் காணப்பட்ட விதத்தில், இணக்கப்பாடு எட்டப்பட்டு செயற்பாடுகள் இடம்பெறும் என எதிர்பார்ப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதன் மூலம், இலங்கையின் முழுமையான கடன் மறுசீரமைப்பு செயல்முறையும் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டக் கட்டமைப்புடன் இணைக்கப்படும் வகையில் மேற்கொள்ளப்படும் என உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கடன் மறுசீரமைப்பு சமமாக நடத்தப்படுவதை உறுதிப்படுத்த தேவையான அனைத்து தகவல்களையும் இலங்கை வழங்கும் என்று எதிர்பார்ப்பதாக உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழு அறிவித்துள்ளது.
கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கையை இலங்கை இறுதி செய்திருப்பது பொருளாதார ஸ்திரத்தன்மையை நோக்கிய ஒரு சாதகமான நடவடிக்கை என சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.
பொருளாதார மறுசீரமைப்பு பயணத்தின் முக்கிய மைல்கல்லான கடன் மறுசீரமைப்பானது கடன் ஸ்திரத்தன்மைக்கு இலங்கை எடுத்துள்ள முக்கிய நடவடிக்கை என நிதியத்தின் சிரேஷ்ட தூதுக்குழு தலைவர் பீட்டர் ப்ரூவர் (Peter Breuer) தெரிவித்துள்ளார்.
கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தை இறுதி செய்திருப்பது இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார வளர்ச்சியில் ஒரு மைல்கல் என இந்திய வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் மற்றும் ஜப்பானுடன் இணைந்து உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவின் இணைத் தலைமை வழங்கி, இந்தியா இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் வளர்ச்சிக்கான உறுதிப்பாட்டை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக அந்த அறிவிப்பில் நினைவுகூரப்பட்டுள்ளது.
முக்கிய பொருளாதார துறைகளில் நீண்டகால முதலீடுகளை ஊக்குவிப்பதன் மூலம் இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஆதரவளிக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையில் கடன் ஸ்திர நிலையை ஏற்படுத்த சம்பந்தப்பட்ட நாடுகள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களுடன் இணைந்து செயற்பட சீனா தயாராக இருப்பதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தாார்.
இலங்கையில் நெருக்கடி ஏற்பட்ட போது, கடன் மறுசீரமைப்பிற்கான அடிப்படை உடன்படிக்கையை முதலில் ஏற்படுத்தியது சீன இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வங்கி என்பதை அவர் நினைவுகூர்ந்தார்.
இதன் மூலம், இலங்கை நிதிச் சீர்திருத்தத்தையும், சர்வதேச கடன் உரிமையாளர்களின் ஆதரவையும் தொடர்ந்து பெற்றுக்கொள்ள முடிந்தாக அவர் மேலும் கூறினார்.
Discussion about this post