இலங்கை தனது கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கையை நிறைவு செய்தமையானது, நாட்டின் பொருளாதார ஸ்திரப்படுத்தலுக்கான பயணத்தில் சாதகமான செயற்பாடாகும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
பொருளாதார மீட்சிக்கான பயணத்தின் முக்கிய மைல்கற்களான கடன் உடன்படிக்கைகளை நிறைவு செய்தல் போன்ற கடன் மறுசீரமைப்பு மற்றும் கடன் நிலைத்தன்மையை ஏற்படுத்துதல் ஆகியவற்றுக்காக இலங்கை மேற்கொண்டுள்ள முக்கிய நடவடிக்கை இதுவாகும் என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான சிரேஷ்ட தூதுக்குழுவின் பிரதானி பீட்டர் ப்ரூவர் நியூஸ்ஃபெஸ்ட்டுக்கு கூறினார்.
எதிர்காலத்தில் வௌியக தனியார் கடன் வழங்குநர்களுடனான உடன்படிக்கைகளை இலங்கை அரசாங்கம் விரைவில் ஏற்படுத்திக்கொள்ளும் என தான் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, இலங்கையின் பிரதான பொருளாதார துறைகளில் நீண்டகால முதலீடுகளை ஊக்குவிப்பதன் ஊடாக பொருளாதார மீட்சிக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.
கடன் மறுசீரமைப்பிற்கான இணக்கப்பாட்டை நிறைவு செய்துள்ளமை, இலங்கையின் பொருளாதார ஸ்திரப்படுத்தல் அதேபோன்று மறுசீரமைப்பு மற்றும் அபிவிருத்திக்கான பயணத்தின் முக்கிய மைல்கல்லாகும் என இந்திய வௌிவிவகார அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரான்ஸ் மற்றும் ஜப்பானுடன் இணைந்து உத்தியோகபூர்வ கடன்வழங்குனர்கள் குழுவிற்கு இந்தியா இணைத்தலைமை வகித்தமையின் ஊடாக இலங்கையின் பொருளாதார ஸ்திரப்படுத்தல், மீட்சி மற்றும் வளர்ச்சிக்கான தனது தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இந்தியா வௌிப்படுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்திற்கு இலங்கை தொடர்பில் உறுதிப்படுத்தலை வழங்கிய முதலாவது கடன்வழங்குநர் நாடு இந்தியா எனவும் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை பாதுகாப்பதற்கு இலங்கைக்கு இது வழிவகுத்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இலங்கையின் கடன் நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக இலங்கைக்கு ஆதரவளிக்க அதனுடன் தொடர்புடைய நாடுகள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு நிதி மறுசீரமைப்பு நடவடிக்கைளை முன்னெடுத்துச் செல்வதற்கும் சர்வதேச கடன் வழங்குனர்களின் ஆதரவை பெறுவதற்கும் முக்கியமான காரணியாக காணப்பட்ட கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கையுடன் தற்காலிகமாக உடன்பட்ட முதலாவது தரப்பு சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கியாகும் என பெய்ஜிங்கில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சீன வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் மாவோ நிங் சுட்டிக்காட்டினார்.
4.2 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை மறுசீரமைப்பதற்கான கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம் இலங்கைக்கும் சீனாவின் எக்ஸிம் வங்கிக்கும் இடையில் பெய்ஜிங்கில் நேற்று(260 கைச்சாத்திடப்பட்டது.
Discussion about this post