மன்னார் விடத்தல்தீவு இயற்கை சரணாலயத்தின் ஒரு பகுதியை விடுவித்து, வனஜீவராசிகள் அமைச்சர் சட்டத்தரணி பவித்ரா வன்னியாராச்சி வௌியிட்ட வர்த்தமானி நடைமுறைப்படுத்தப்படுவதை தடுத்து, உயர் நீதிமன்றம் இன்று இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
மன்னார் – விடத்தல்தீவு இயற்கை சரணாலயத்தின் ஒரு பகுதியை விடுவித்து வௌியிடப்பட்ட வர்த்தமானியை ஆட்சேபித்து பல சுற்றுச்சூழல் அமைப்புகள் தாக்கல் செய்த இரண்டு அடிப்படை உரிமை மனுக்கள் இன்று உயர் நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இந்த மனுக்கள் உயர் நீதிமன்ற நீதியரசர்களான பிரீத்தி பத்மன் சூரசேன, ஷிரான் குணரத்ன மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.
அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை நிறைவு பெறும் வரை வர்த்தமானி நடைமுறைப்படுத்தப்படுவதை தடுத்து நீதியரசர்கள் குழாம் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
விடத்தல் தீவு ”இயற்கை சரணாலயம் ” என குறிப்பிடப்பட்டிருந்த பகுதி நிறைவுக்கு வருவதாக கடந்த மாதம் 6 ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானி ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.
வனஜீவராசிகள், வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் சட்டத்தரணி பவித்ராதேவி வன்னியாராச்சிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கமைய, அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட உப ஆவணத்தில், விடத்தல் தீவு ”இயற்கை சரணாலயம்” என குறிப்பிடப்பட்டிருந்த பகுதி நிறைவுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட விடத்தல்தீவின் 400 ஏக்கரை இயற்கை சரணாலயத்தில் இருந்து விடுவிப்பதாக வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டிருந்தது.
விடத்தல்தீவு கண்டல் தாவரங்களை அதிகளவில் கொண்ட பகுதியாக காணப்படுவதுடன், பறவைகள் சரணாலயமாகவும் அமைந்துள்ளது.
இறால் பண்ணைகள் கடல் அட்டை பண்ணைகள் போன்ற நீர் வேளாண்மையை முன்னெடுப்பதற்காக இயற்கை சரணாலயத்தின் ஒரு பகுதி விடுவிக்கப்பட்டதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடந்த 11 ஆம் திகதி தெரிவித்திருந்தார்.
மன்னார் விடத்தல் தீவு இயற்கை சரணலயத்தின் ஒரு பகுதியை விடுவித்து வௌியிடப்பட்ட வர்த்தமானிக்கு சூழலியலாளர்கள் மற்றும் பொது அமைப்புகள் தொடர்ச்சியாக கடும் எதிர்ப்பை வௌிப்படுத்தி வருகின்றனர்.
Discussion about this post