இலங்கை அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு(Ranil Wickremesinghe) ஆதரவு வழங்கும் தீர்மானத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்(R.Sampanthan) எடுப்பார் என்று நம்புகின்றோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன(Vajira Abeywardena) தெரிவித்துள்ளார்.
மேலும், அந்தத் தீர்மானத்துக்கு வடக்கு – கிழக்கு தமிழ்க் கட்சிகளின் தலைவர்களும் இணங்குவார்கள் என்றும் நம்புகின்றோம் என்றார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ இலங்கையில் மிகவும் அரசியல் அனுபவம் வாய்ந்த சிங்களத் தலைவர்களில் அதிபர் ரணில் விக்ரமசிங்க முக்கிய இடம் வகிக்கின்றார்.
அதிபர் தேர்தல்
அதேவேளை, மிகவும் அரசியல் அனுபவம் வாய்ந்த தமிழ்த் தலைவர்களில் இரா.சம்பந்தன் முக்கிய இடம் வகிக்கின்றார். இருவரும் தவிர்க்க முடியாத ஆளுமைகள். எதிர்வரும் அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் தீர்மானத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எடுப்பார் என்று நம்புகின்றோம்.
அந்தத் தீர்மானத்துக்கு வடக்கு – கிழக்கு தமிழ்க் கட்சிகளின் தலைவர்களும் இணங்குவார்கள் என்றும் நம்புகின்றோம்.
எனவே, வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் அமோக வாக்குகளால் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெறுவார். அதிபர் தேர்தலில் இம்முறை ரணில் விக்ரமசிங்க வரலாற்று வெற்றியை நிலைநாட்டுவார்.
தமிழ்ப் பொது வேட்பாளர் பயனற்ற விடயம். அதைப் பற்றிப் பேசி நாம் அலட்டிக்கொள்ள விரும்பவில்லை. தேவையில்லாத விடயத்தைப் பேசி காலத்தை வீணடிக்கக்கூடாது.” என குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post