பாராளுமன்ற சிறப்புரிமைகள் என்ற போர்வையில், நீதித்துறை மற்றும் நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் விவகாரங்களில் தலையிடுவதை பாராளுமன்ற உறுப்பினர்கள் தவிர்க்க வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அவ்வாறான செயற்பாடுகளால் நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கை மீறப்படுவது போன்ற மோசமான விளைவுகள் ஏற்படும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதித்துறையின் சுதந்திரத்தையும் சட்டவாட்சியையும் பாதுகாப்பதற்கு தாம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
சுதந்திரமான மற்றும் தைரியமான நீதித்துறையை ஆதரிப்பதாகவும், சட்டவாட்சியை பாதுகாப்பது அவசியம் எனவும் அவர்கள் வௌியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நீதித்துறை அதிகாரி ஒருவருக்கு எதிராக ஏதேனும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுமாயின், முதலில் அதனை பாரபட்சமின்றி விசாரணை செய்ய வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
அவ்வாறான விசாரணையின் பின்னர், நீதித்துறை அதிகாரி குற்றமிழைத்துள்ளார் என்பது உறுதி செய்யப்படும் பட்சத்தில், உரிய நடவடிக்கை எடுக்க முடியும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
Discussion about this post