நாட்டின் மாவட்ட நீதிபதிகள் மற்றும் நீதவான்களின் தொழில்சார் அமைப்பான நீதிச் சேவைகள் சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையூடாக தமது பாராளுமன்ற சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஸ சபாநாயகரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
பாராளுமன்றத்தின் அதிகாரம் மற்றும் சிறப்புரிமைகள் குழு முன்னிலையில், குறித்த சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளரை அழைத்து விசாரணை நடத்தி உரிய தீர்ப்பை வழங்குமாறு நீதி அமைச்சர் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நீதிபதிகள் சிலர் மற்றும் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் தொடர்பில் நீதி அமைச்சர் கடந்த 19 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கருத்து வௌியிட்டிருந்தார்.
கடந்த 19 ஆம் திகதி நீதி அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு நீதிச் சேவைகள் சங்கம் நேற்று ஊடக அறிக்கையொன்றை விடுத்துள்ளது.
சங்கத்தின் தலைவர், கேகாலை மாவட்ட நீதவான் ருவன் திசாநாயக்க மற்றும் செயலாளர், காலி நீதவான் இசுறு நெத்திகுமார ஆகியோரின் கையொப்பத்துடன் அறிக்கை வௌியிடப்பட்டது.
நீதிமன்ற கட்டமைப்பை விமர்சிக்கும் வகையிலான பொறுப்பற்ற கருத்துகள் தொடர்பில் தமது சங்கத்தின் கவனம் திரும்பியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீதித்துறைக்கு ஏற்படும் வௌித்தரப்பு அழுத்தங்களை தவிர்த்து, அதன் நலனுக்காக முக்கிய முடிவுகளை எடுத்த நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்ட பின்னர், அவர்களுக்கு தனிப்பட்ட ரீதியில் அபகீர்த்தி ஏற்படும் வகையில் நிலைப்பாட்டை உருவாக்குவது இதன் ஒரு நடவடிக்கையாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதித்துறை மீதான வெளிப்புற அழுத்தங்களிலிருந்து பாதுகாப்பதற்கான பலமிக்க மற்றும் கடினமான பணியை ஆற்றி வரும் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளரை பாதுகாப்பதற்காக தாம் நிபந்தனையின்றி முன்னிற்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை தொடர்பாக சிறப்புரிமை கேள்வி எழுப்பி, நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ, பிரதம நீதியரசர் மற்றும் நீதிச்சேவைகள்ஆணைக்குழுவின் செயலாளருக்கு நகல்களை அனுப்பி, இன்று சபாநாயகருக்கு எழுத்துமூல முறைப்பாடு ஒன்றை அனுப்பியுள்ளார்.
Discussion about this post