சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன், அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) களமிறங்கினால் அவருக்கு தமிழ் மக்களின் ஆதரவு கிடைப்பது கடினமாக அமையும் என தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் (D. Siddarthan) தெரிவித்துள்ளார்.
அதேநேரம், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவுடன் ஒப்பிடும் போது, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு (Sajith Premadasa) தமிழ் மக்கள் மத்தியில் ஆதரவு அதிகமென சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலின் போது த. சித்தார்த்தன் கூறியுள்ளார்.
இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலை முன்னிட்டு, வேட்பாளர்களாக களமிறங்குவதாக கூறப்படும் தரப்பினர் வடக்கு மற்றும் கிழக்குக்கான பயணங்களை தீவிரப்படுத்தியுள்ளனர்.
தமிழ் மக்களின் ஆதரவு
இந்த நிலையில், தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக் கொள்ள சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க முயற்சித்து வருவதாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான த. சித்தார்த்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் அவர் தேர்தலில் களமிறங்கினால் அவருக்கு தமிழ் மக்களின் ஆதரவு கிடைக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுமந்திரன் எதிர்ப்பு
அத்துடன், அதிபர் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரை களமிறக்குவது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் எதிர்ப்பு வெளியிட்டாலும், அதனை ஆதரிக்கும் நிலைப்பாட்டில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் இருப்பதாக சித்தார்த்தன் கூறியுள்ளார்.
மேலும், இலங்கையில் அதிபர் தேர்தலுக்கு முன்னதாக பொதுத்தேர்தல் நடத்தப்பட்டால் தான் புதிய கூட்டணியின் கீழ் போட்டியிடுவதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post