2022 ஆம் ஆண்டில் (2023), உயர் தரம் கற்கும் 6,000 மாணவர்களுக்கு மாதாந்தம் 6,000 ரூபா வீதம் கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe)தெரிவித்துள்ளார்.
60 மாணவர்களை தெரிவு செய்து100 வலயங்கள் உள்ளடங்கும் வகையில் 02 வருடங்களுக்கு குறித்த உதவித் தொகை வழங்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
உதவித்தொகை பெறும் மாணவர்கள்
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ”இந்நாட்டுப் பிள்ளைகளுக்கு இன்று மிகவும் மகிழ்ச்சியான நாள். முதலில், இந்த உதவித்தொகை பெறுவதற்கு உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்திட்டத்தின் கீழ் ஒரு இலட்சம் உதவித்தொகை வழங்கப்படும். உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கு 6,000 ரூபாய் உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.
இந்த புலமைப்பரிசில்களை வழங்க அதிபர் நிதியத்தில் இருந்து 04 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளோம்.
கடந்த 3 வருடங்கள் நம் அனைவருக்கும் கடினமான காலமாக அமைந்தது. நாங்கள் அனைவரும் அவதிப்பட்டோம். உணவு இருக்கவில்லை. மாணவர்களுக்கு பாடசாலைக்குச் செல்வதற்குப் போக்குவரத்து வசதி இருக்கவில்லை. இப்போது அந்த நிலைமை இல்லை.
பொருளாதார நெருக்கடி
அதிபர் என்ற வகையில் இந்த நாட்டின் பிள்ளைகள் துன்பப்படுவதற்கு இடமளிக்காதிருக்க தீர்மானித்தேன். அதன்படி இந்த நாட்டை பொருளாதார ரீதியாக மீட்பதற்குத் தேவையான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து விடுவிக்க தேவையான திட்டத்தை செயற்படுத்தியுள்ளோம். அதன் மூலம் அடுத்த 5-10 ஆண்டுகளில் பிள்ளைகளுக்கான சிறந்த நாட்டை உருவாக்குவதே எங்கள் நோக்கமாகும்.
கடந்த பொருளாதார நெருக்கடியால், பலர் தங்கள் வருமான வழிகளை இழந்துள்ளனர். அதன்படி, அஸ்வெசும திட்டத்தின் மூலம் 24 இலட்சம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்துள்ளோம்.
அத்துடன், மக்கள் வாழும் காணியின் சட்டபூர்வ உரிமையை மக்களுக்கு வழங்க உறுமய வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
காணி உரிமை வழங்குதல்
மேலும், நகர்ப்புற அடுக்குமாடி குடியிருப்புகளில் வசித்த மக்களுக்கு அந்த வீட்டின் உரிமை இருக்கவில்லை. எனவே, அரச காணியில் வசித்த, அரசுக்குச் சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்த, அரச அடுக்குமாடி குடியிருப்புகளில் வசித்த அனைவருக்கும் அதற்கான உரிமை வழங்கப்படுகிறது.
மேலும், நாட்டின் பிள்ளைகளின் கல்வியில் கவனம் செலுத்தி, உங்கள் அனைவருக்கும் இந்த உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, மக்களுக்கு வருமானம் அளிக்கவும், உரிமைகளை வழங்கவும் பிள்ளைகளுக்கு கல்வி வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
எனவே இப்பிள்ளைகள் இந்த உதவித்தொகையை சரியான முறையில் பயன்படுத்தி தங்கள் கல்வியை மேம்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்” என அதிபர் தெரிவித்தார்.
Discussion about this post