யாழ்ப்பாணத்தில் (Jaffna) அமைந்துள்ள இந்திய துணைத் தூதரகம் (Indian Consulate) முன்பாக யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறும் இந்திய இழுவைப் படகை தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தி இன்று (18) போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
“இந்திய அரசே எமது கடல் வளத்தினை சூறையாடாதே“ என கோரி யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சமாசங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பல்வேறு கோசங்களை எழுப்பி
யாழ்ப்பாணம், சென் பொஸ்கோ பாடசாலைக்கு அருகாமையிலிலுள்ள மருதடிச் சந்தியில் இருந்து பேரணியாகச் சென்று தூதரகம் முன்பாக கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் போது “சிறிலங்கா கடற்படையே நிறுத்து நிறுத்து“, “அத்துமீறலை தடுத்து நிறுத்து“, “கடற்றொழில் அமைச்சர் கண்ணை திறந்துபார்”, “இந்திய அரசே எம்மையும் வாழ விடு“, “சிறிலங்கா காவல்துறையே எங்களை தடுக்காதே“ உள்ளிட்ட பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதனைத்தொடர்ந்து அவர்களது கோரிக்கைள் அடங்கிய மகஜரொன்றை கடற்றொழிலாளர் சங்கப் பிரதிகள் துணைத்தூதரகத்தில் கையளித்தமை குறிப்பிடத்தக்கது
Discussion about this post