சிறிலங்கா (Sri Lanka) அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) வேலைத்திட்டங்கள் மீது நாட்டு மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை தற்போது அதிகரித்து வருவதாக சமூக வலுவூட்டுகை இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் (Anupa Pasqual) தெரிவித்துள்ளார்.
அதிபர் ஊடக மையத்தில் இன்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “நாட்டு மக்களின் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்ட சீர்திருத்தங்களை தற்போதைய அரசாங்கம் வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறது.
அரசாங்கத்தின் வேலைத்திட்டம்
அதற்கு மத்தியில் நாட்டைப் பொறுப்பேற்க பலர் முன்வந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களிடத்தில் அதற்கான கொள்கைகள் எவையும் இல்லை.
நாட்டில் பலரும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தினை ஏற்றுக்கொண்டுள்ள போது, சிலர் மாத்திரம் அதற்குப் புறம்பாகச் செயற்படுகிறார்கள்.
யார் எவ்வாறு அறிக்கைகளை வெளியிட்டாலும், ரணில் விக்ரமசிங்கவினால் கொண்டுவரப்பட்ட சீர்திருத்தங்கள் வெற்றியடைந்துள்ளன என்பதே உண்மையாகும்.
ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் பொருளாதார முன்னேற்றத்திற்கு அடித்தளமிட்டுள்ளதுடன் அதனை எவ்வித பிரச்சினைகளும் இன்றி நடைமுறைப்படுத்தி வருகின்றது.
நாட்டின் பொருளாதாரம்
இலங்கையில் பொருளாதார முறைமை, பணவீக்கம், சமூக நலன் ஆகிய பிரிவுகளை நோக்கி நகர்கிறது. அரசாங்கம் நலன்புரித் திட்டங்களை ஆரம்பித்த போது 35 வீதமாக இருந்த வட்டி விகிதம் இன்று 12 வீதமாக ஆக குறைந்துள்ளது.
மேலும், கொள்கைகளின் அடிப்படையில் மட்டுமே நாட்டைக் கட்டியெழுப்ப முடியும். தனிநபர்கள் அல்லது கட்சிகளால் அதனைச் செய்ய முடியாது.
கட்சிகள் மற்றும் நபர்கள் மாறுவதால் ஒரு நாட்டின் பொருளாதாரம் மாற்றம் காணாது. தற்போதுள்ள தேர்தல் முறைமை மாற்றப்பட வேண்டியது அவசியம். அரசின் கொள்கைகள் பிரசித்தமடைந்துள்ளன.
அந்த வேலைத்திட்டங்களுக்கு ரணில் விக்ரமசிங்கவே தலைமை தாங்குகிறார் என்பது இரகசியமல்ல. அதனை ஒவ்வொரு துறைசார் நிபுணர்களும், மக்களும், பிற கட்சிகளும் ஏற்றுக்கொண்டுள்ளனர்” என தெரிவித்துள்ளார்.
Discussion about this post