கலட்டுவாவ பிரதான நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து நீரை கொண்டுசெல்லும் குழாயில் ஏற்பட்ட வெடிப்பினால் தடங்கலான நீர் விநியோகத்தை இன்று நள்ளிரவுக்குள் வழமைக்கு கொண்டுவர முடியுமென தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் பௌசர்கள் மூலம் நீர் விநியோகம் முன்னெடுக்கப்படுவதாக சபை கூறியுள்ளது.
இதன்காரணமாக தற்போது கையிருப்பிலுள்ள நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு நுகர்வோரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கலட்டுவாவ, ஹோமாகம உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் நீரை கொண்டுசெல்லும் குழாயில் இன்று(17) காலை காரொன்று மோதி விபத்திற்குள்ளானதில் குழாயில் வெடிப்பு ஏற்பட்டது.
சாரதிக்கு நித்திரை ஏற்பட்டதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன் அவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சாரதி காயங்களுடன் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொடகம, ஹோமாகம, பன்னிப்பிட்டிய, ருக்மல்கம, பெலவத்த, மத்தேகொட ஆகிய பகுதிகளுக்கான நீர் விநியோகம் மறு அறிவித்தல் வரை துண்டிக்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதனால் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட குடிநீர் பாவனையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Discussion about this post