கொழும்பு தேசிய அருங்காட்சியகத்தில் தீயணைப்பு கட்டமைப்பை நிறுவுவதில் சுமார் 9 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தேசிய அருங்காட்சியகத் திணைக்களத்தின் 2023 ஆண்டு அறிக்கையை அடிப்படையாக கொண்டு இந்த விடயம் வௌிப்படுத்தப்பட்டுள்ளது.
தீயணைப்பு கட்டமைப்பை நிறுவதற்கான பொறுப்பு தகுதியற்ற ஒப்பந்ததாரரிடம் வழங்கப்பட்டமையே நட்டம் ஏற்படுவதற்கான காரணமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முதலாவது ஒப்பந்ததாரர் முறையாக செயற்படாததால் ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டு மற்றுமொரு தரப்பிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
2021 ஜனவரியில் இதற்காக முதலாவது ஒப்பந்ததாரர் 10 கோடி ரூபா மதிப்பீட்டை வழங்கியுள்ளார்.
இதில், 4 கோடிக்கும் அதிகமான கொடுப்பனவு செலுத்தப்பட்ட நிலையில் ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அதன்பின்னர், 18 கோடி ரூபா மதிப்பீட்டில் இடைநிறுத்தப்பட்ட பணிகள் கடந்த ஆண்டு டிசம்பரில் இரண்டாவது ஒப்பந்ததாரரிடம் வழங்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், சுமார் 9 கோடி ரூபா கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளதாக கணக்காய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Discussion about this post