பாதுகாப்பற்ற தொழிலாளர் புலம்பெயர்வை ஒழிப்பதற்கான சர்வதேச மன்றத்தின் இலங்கை உச்சி மாநாடு இன்று (13) காலை இரத்மலானை ஸ்டெய்ன் கலையகத்தில் (Stein Studios) ஆரம்பமானது.
இந்த மாநாடு இலங்கையில் முதன்முதலாக நடைபெறுகின்றது.
கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் ஏற்பாட்டில், இரத்மலானை – ஸ்டெய்ன் கலையகத்தில் இந்த மாநாடு இடம்பெறுகின்றது.
நவீன அடிமைத்துவம் மற்றும் ஆட்கடத்தலை தடுப்பது தொடர்பாக அரசு மற்றும் வணிகத்திற்கு இணையான விவாதத்துடன், பாதுகாப்பற்ற தொழிலாளர் இடப்பெயர்வுகளை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச மன்றத்தின் இலங்கை மாநாடு ஆரம்பமாகியுள்ளது.
ஆசிய பசுபிக் வலய அமைச்சு மட்ட பிரதிநிதிகள் – இராஜதந்திரிகள், சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள், பிரபல வர்த்தக நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.
ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத குடியேற்றம் உள்ளிட்ட நவீன அடிமைத்தனத்திற்கு எதிராக ஆசிய பசுபிக் வலயத்தின் முன்னணி அமைப்பாக பாலி மாநாடு திகழ்கின்றது.
அரசாங்கம் மற்றும் வணிக உச்சி மாநாடு அதன் செயற்பாட்டிலுள்ள முதன்மையான பேச்சுவார்த்தை தளமாக கருதப்படுகிறது.
பாதுகாப்பற்ற தொழிலாளர் புலம்பெயர்வை ஒழிப்பதற்கான சர்வதேச மன்றத்தின் இலங்கை உச்சி மாநாட்டை வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா குழுமமும் கம்மெத்தவும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
அவுஸ்திரேலியாவின் மிகப்பெரும் செல்வந்த வர்த்தகர் கலாநிதி அன்ட்ரூ பொரஸ்ட் (Dr. Andrew Forrest) மற்றும் இந்தோனேஷியாவின் மிகப்பெரும் செல்வந்த வர்த்தகர் கரிபால்டி தொஹிர் (Garibaldi Thohir) உள்ளிட்டோர் மாநாட்டின் இணை தலைவர்களாக செயற்படுவதுடன், மாநாட்டுக்கான இலங்கையின் தலைவராக கம்மெத்த தலைவர் வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் குழுமப் பணிப்பாளர் ஷெவான் டெனியல் செயற்படுகிறார்.
இன்று (13) காலை நடைபெற்ற மாநாட்டிற்கான அங்குரார்ப்பண நிகழ்வில், வலய நாடுகளின் பிரதிநிதிகள், சர்வதேச நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களின் தலைவர்கள், தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள், சர்வதேச இராஜதந்திரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
மாநாட்டில் கலந்துகொண்டவர்களை வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் தலைவரும் முகாமைத்துவ பணிப்பாளருமான சஷி ராஜமகேந்திரன் வரவேற்று உரையாற்றினார்.
மாநாட்டிற்கான விசேட செய்தியை வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி வழங்கியிருந்தார்.
நவீன அடிமைத்தனம், ஆட்கடத்தல் மற்றும் புலம்பெயர்வை தடுப்பதற்கான அவுஸ்திரேலிய தூதுவர் லின் பெல் ( Lynn Bell) மற்றும் பல்துறை ஒத்துழைப்பிற்கான இந்தோனேஷிய துணை அமைச்சர் ட்ரீ தாயத் ஆகியோர் பிராந்திய பங்களிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.
பாதுகாப்பற்ற தொழிலாளர் புலம்பெயர்வை ஒழிப்பதற்கான சர்வதேச மன்றத்தின் இலங்கை மாநாட்டில் அரங்கேற்றப்பட்ட நடன நிகழ்வுகள் கண்களுக்கு விருந்து படைத்தன.
பாதுகாப்பற்ற தொழிலாளர் புலம்பெயர்வை ஒழிப்பதற்கான சர்வதேச மன்றத்தின் இலங்கை மாநாட்டில் இன்று பல சுற்று கலந்துரையாடல்கள் ஸ்டெய்ன் கலையகத்தில் நடைபெறுவதுடன், பல புதிய செயற்திட்டங்களும் தயாரிக்கப்படவுள்ளன.
பாலி செயன்முறை மாநாட்டின் முதலாம் நாளான இன்றைய நாளுக்கான இறுதிப் பணியாக பிராந்திய வர்த்தக பிரமுகர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள், ஆட்கடத்தல், சட்டவிரோத புலம்பெயர்வு, சிறுவர் தொழிலாளர்களை பயன்படுத்துதல் உள்ளிட்ட நவீன அடிமைத்தனத்தை தடுப்பதற்கான தமது அர்ப்பணிப்பை வௌிப்படுத்தும் வகையில் உறுதிமொழி ஏற்றனர்.
இதற்கு கொழும்பு உறுதிமொழி என பெயரிடப்பட்டிருந்தது.
வௌிநாட்டுப் பணியாளர்களால் நாட்டின் பொருளாதாரத்திற்கு வழங்கப்படுகின்ற பங்களிப்பு மற்றும் அவர்கள் எதிர்நோக்க நேரிடுகின்ற மனித உரிமை மீறல்களிலிருந்து பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்பு செய்வதாக உறுதிமொழியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகளாவிய விநியோக செயற்பாட்டில் மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில், ஊழியர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் வலுவான சட்டங்களை அரசாங்கங்கள் ஊடாக நடைமுறைப்படுத்துவதற்கு உள்ள அர்ப்பணிப்பும் இந்த உறுதிமொழியில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
Discussion about this post