தமிழகத்தில் கரையொதுங்கிய அனலைதீவு கடற்றொழிலாளர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) தெரிவித்துள்ளார்.
அனலைதீவு கடற்பரப்பில் இருந்து கடந்த ஜூன் மாதம் 10 ஆம் திகதி மாலை 5.00 மணியளவில் கடற்றொழிலுக்கு சென்ற குறித்த இருவரும் கரை திரும்பாத காரணத்தினால் பதற்றம் ஏற்பட்டிருந்தது.
இதனையடுத்து அனலைதீவு கடற்பரப்பெங்கும் கடற்படையினர் மற்றும் கடற்றொழிலாளர்களால் தீவிர தேடுதல் முன்னெடுக்கப்பட்டு வந்தது.
இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை
இந்நிலையில், அனலைதீவைச் சேரந்த திருச்செல்வம் மைக்கல் பெனாண்டோ,நாகலிங்கம் விஜயகுமார் என்ற இருவருமே படகு இயந்திரம் பழுதாகி தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் பகுதியில் கரையொதுங்கியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன.
இதனையடுத்து குறித்த இருவரது குடும்பத்தினர் இன்று (13) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து இருவரையும் இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை எடுத்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ள நிலையில், கடற்றொழில் அமைச்சரினால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
Discussion about this post