11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவினால் தாக்கல் செய்யப்பட்ட எழுத்தாணை மனு மீதான விசாரணைக்காக ஐவரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாமை பெயரிடுவதாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஷஷி மகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் இந்த மனு இன்று (07) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
2008 ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் சனநெரிசல் மிக்க சில இடங்களிலிருந்து 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இதற்கான வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முழுமையான நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் விசாரிக்குமாறு பாதிக்கப்பட்ட தரப்பினரால் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த கோரிக்கையை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம், தற்போது ஐவரடங்கிய நீதிபதிகள் குழாமை பெயரிட்டுள்ளது.
இந்த மனு எதிர்வரும் 25 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இதற்கமைய, அன்றைய தினம் ஐவரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் மனு மீதான விசாரணைகள் இடம்பெறவுள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணி நுவன் போபகே தெரிவித்துள்ளார்.
இதன்போது, பாதிக்கப்பட்ட பெற்றோர் சார்பில் விடயங்களை முன்வைப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் வசந்த கரன்னாகொட எந்த வகையிலும் தப்பிக்க முடியாதென்பதை நிரூபிக்கும் வகையில், நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
Discussion about this post