பொருளாதார சீர்திருத்த சட்டமூலத்தை சமர்ப்பித்து நாட்டின் பொருளாதாரத்தை சரியான பாதைக்கு திருப்புதவற்கான முதல் அடியை வைத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அடுத்த மூன்று வருடங்களில் இளைஞர்களுக்கான சிறந்த நாடு கட்டியெழுப்பப்படுமெனவும் அவர் உறுதியளித்தார்.
எந்தவொரு அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும், எந்த தலைவர் நாட்டை பொறுப்பேற்றுக்கொண்டாலும் இணக்கப்பாட்டுடன் பயணிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, சரியான திட்டத்துடன் செயற்பட்டால் மாத்திரமே சரிவடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டினார்.
ஜா-எல, ஏக்கல பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள Cephalosporin ஊசி மற்றும் Meldol மருந்து உற்பத்தி தொழிற்சாலையை நேற்று திறந்து வைத்து உரையாற்றிய போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்தார்.
எதிர்காலம் நிலையற்றதென நினைக்கும் இளையோருக்காக அடுத்த மூன்று வருடங்களில் சிறந்த நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.
2019 ஆம் ஆண்டில் புள்ளிவிபரத் திணைக்களம் மேற்கொண்ட கணக்கெடுப்பில், 15 முதல் 25% வரையில் நாட்டின் வறுமை அதிகரித்துள்ளமை தெரியவந்துள்ளதாக அவர் கூறினார்.
இந்நிலைமை தொடர்ந்தால், நாட்டில் இளையோருக்கான எதிர்காலம் இல்லாமல் போய்விடும் என்பதுடன் இளையோருக்கு தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதே தமது முதற்கடமை எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
அத்துடன், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 3000 ஏக்கரும், யாழ். மாவட்டத்தில் 1500 ஏக்கரும், திருகோணமலையில் 4000 ஏக்கரும் முதலீட்டு வலயமாக அபிவிருத்தி செய்யப்படுகின்றமையை ஜனாதிபதி இதன்போது நினைவுகூர்ந்தார்.
இதனூடாக நாட்டில் 10,000 ஏக்கர் வர்த்தக வலயங்கள் உருவாக்கப்படுமென்பதால், பெரும் பொருளாதார வளர்ச்சியை எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்
Discussion about this post