பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது X பக்கத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தலைமைத்துவத்தின் கீழான முன்னேற்றம் மற்றும் செழிப்பு ஆகியவற்றில் இந்திய மக்களின் நம்பிக்கையை இந்த வெற்றி நிரூபிப்பதாக ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வாழ்த்துச் செய்திக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளதோடு, இந்திய – இலங்கை பொருளாதார கூட்டுறவில் தொடர் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று மூன்றாவது முறையாக பதவியேற்றுள்ள தனது நண்பர் நரேந்திர மோடிக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்தியாவிற்கு சேவை செய்வதற்கான அவருடைய தொலைநோக்கு மற்றும் அர்ப்பணிப்பை மக்கள் அங்கீகரித்துள்ளதாகவும், புதிய அரசாங்கத்துடனான தமது உறவுகளை மேலும் வலுப்படுத்த தாம் எதிர்பார்த்துள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் வாழ்த்துக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளதோடு, இந்திய – இலங்கை கூட்டாண்மை புதிய எல்லைகளைப் பட்டியலிடும் போது, தொடர்ந்தும் ஆதரவை எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாழ்த்துகளை தெரிவிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் வாழ்த்துக்கு பாராதப் பிரதமர் நரேந்திர மோடி தனது நன்றியைத் தெரிவித்துள்ளதுடன், இலங்கையுடனான தமது உறவுகள் விசேடமானதும், தனித்துவம் நிறைந்த சகோதரத்துவமானதும் என தெரிவித்துள்ளார்.
Discussion about this post