கொலன்னாவை பிரதேச செயலக பிரிவில் வௌ்ள அனர்த்தம் ஏற்படுவதற்கு காரணமாகவுள்ள சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அத்துடன், காணிகளை நிரப்பும் நடவடிக்கைகளை நிறுத்துதல், பிரதேசத்தில் வடிகாலமைப்பு தொகுதியை தூய்மையாக்குதல் உள்ளிட்ட ஏனைய அனைத்து படிமுறைகளையும் மேற்கொள்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பலத்த மழைவீழ்ச்சியினால் பாதிக்கப்பட்ட கொலன்னாவை பகுதிக்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதேச மக்கள் முன்வைத்த விடயங்களை கருத்திற்கொண்டு அமைச்சரவை பத்திரங்களை சமர்ப்பித்தார்.
குறித்த பிரதேசத்தில் வௌ்ள அனர்த்தம் ஏற்படுவதற்கு மூல காரணங்களை அடையாளங்கண்டு எதிர்வரும் காலங்களில் அவ்வாறான நிலைமைகள் மீண்டும் ஏற்படாமல் இருப்பதற்கு நடவடிக்கைகளை முன்மொழியவும், எல்லைப்பகுதிக்குள் காணப்படும் காணிகளை அதிகபட்சம் பயனுள்ள வகையில் பயன்படுத்தி கொலன்னாவை நகரத்தை மீண்டும் திட்டமிடுவதற்காக விரிவான அபிவிருத்தி திட்டத்தை தயாரிப்பதற்கு குழுவொன்றை நியமிக்கவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
Discussion about this post