முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மேற்கொண்ட தாக்குதலால் தமது தந்தையின் பாதம் உடைந்ததாக தெரிவித்து, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஸவின் மகன், கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இது குறித்து வாக்குமூலம் பெறுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
தாக்குதல் தொடர்பில் தாம் இன்று கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ததாக பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஸவின் மகன் நிலுபுல் ராஜபக்ஸ தெரிவித்தார்.
தனது தந்தைக்கு இராணுவ வைத்தியசாலையில் காலை 7 மணி முதல் முற்பகல் 11 மணி வரை சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் , பின்னர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தையடுத்து மஹிந்தானந்த அளுத்கமகேவினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக நிலுபுல் ராஜபக்ஸ தெரிவித்தார்.
தாக்குதலைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஸ இராணுவ வைத்தியசாலையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Discussion about this post