பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் சம்பள உயர்வு வழங்குவதை எதிர்த்து அதற்கு இடைக்கால உத்தரவு வழங்குமாறு தோட்ட நிறுவனங்கள் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கில் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு வழங்காது தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் சம்பளம் வழங்க வழி வகுத்தமைக்கு இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் வைத்து ஜெனீவா ரைம்ஸ் ஊடகத்தின் செய்தியாளருக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இந்த கருத்துக்களை வௌியிட்டார்.
தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் இ.தொ.கா மறைந்த தலைவர்களான சௌமியமூர்த்தி தொண்டமான், ஆறுமுகன் தொண்டமான் காலம் முதல் இன்றுவரை தொடர்ந்தும் போராட்டங்கள் ஊடாகவே சம்பள உயர்வை பெற்றுக் கொடுத்துள்ளது.
தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் இ.தொ.கா மீது முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள், குற்றச்சாட்டுக்களை இ.தொ.கா இன்று தவிடுபொடியாக்கியுள்ளது.
நீதி துறையின் இந்தச் செயற்பாடானது மக்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் ஆதரவு வழங்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன, தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார, இவ்வழக்கில் வாதாடிய சட்டத்தரணிகள் மற்றும் சம்பள நிர்ணய சபை, தொழில் அமைச்சின் உத்தியோகஸ்தர்கள், அரசாங்கம் உட்பட அனைத்து தரப்பினருக்கும் இ.தொ.கா சார்பில் அதன் தலைவர் செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இம்மாதம் 10 ஆம் திகதி 1700 ரூபாய் சம்பளம் கட்டாயம் வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Discussion about this post