டீசல் விலை குறைக்கப்பட்டாலும் விலைச் சூத்திரத்திற்கு அமைய பஸ் கட்டணம் குறைக்கப்பட மாட்டாதென தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இரு சந்தர்ப்பங்களில் டீசலின் விலை தொடர்ச்சியாக குறைக்கப்பட்டாலும், அதன் வீதம் 2 .8 ஆகவே காணப்படுவதாக ஆணைக்குழு கூறியுள்ளது.
பஸ் கட்டணங்களை குறைப்பதாயின், அந்த வீதமானது 4 அல்லது அதனை விடவும் அதிகமாக இருக்க வேண்டியது அவசியமென தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் சஷி வெல்கம தெரிவித்தார்.
எவ்வாறாயினும், விலைச் சூத்திரத்திற்கு அமைய, இம்மாதம் வருடாந்த பஸ் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இதற்கமைய, பஸ்களுக்கான உதிரிப்பாகங்களின் விலை குறைவடைந்தமை, டீசல் விலை குறைவடைந்தமை உள்ளிட்ட 12 விடயங்களை கவனத்திற்கொண்டு பஸ் கட்டண திருத்தத்தை மேற்கொள்ளவுள்ளதாக சஷி வெல்கம தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அடுத்த மாதம் முதலாம் திகதியிலிருந்து பஸ் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படுமென எதிர்பார்க்கப்படுவதாக அகில இலங்கை மனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, எரிபொருள் விலை குறைக்கப்பட்டாலும் முச்சக்கரவண்டிகளுக்கு கட்டண குறைப்பு மேற்கொள்ளப்பட மாட்டாதென முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கம் கூறியுள்ளது.
இதனிடையே வாகன உதிரிப்பாகங்களின் விலை அதிகரிப்பினால் தாமும் கட்டணக் குறைப்பை மேற்கொள்ளப்போவதில்லை என அகில இலங்கை பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சங்கம் அறிவித்துள்ளது.
Discussion about this post