கண்டி மாவட்டத்தில் கடந்த ஆறு மாதங்களில் 1,836 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் சேனக தலகல தெரிவித்துள்ளார்.
கண்டி மாவட்டத்தில் இதுவரை டெங்கு மரணங்கள் எதுவும் பதிவாகவில்லை எனவும், நோயாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும், இறப்பு வீதத்தை பூஜ்ஜியமாக வைத்திருக்கவும் விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக கண்டி மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் 30ஆம் திகதி நடைபெற்ற கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த மே மாதத்தில் மாவட்டத்தில் 251 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், கண்டி நகர எல்லையில் மட்டும் 47 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் தெரிவித்தார். வீடுகளில் டெங்கு பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஆனால் கொசுக்கள் பெருகும் இடங்கள் அரச நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களில் காணப்படுவதாகவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.
மத்திய மாகாணத்தில் கடந்த வருடம் 9 டெங்கு மரணங்கள் பதிவாகியதாகவும், சிகிச்சை பெறுவதில் தாமதம் உள்ளிட்ட பல காரணங்கள் பாதிக்கப்பட்டதாகவும் மத்திய மாகாண சமூக சுகாதார நிபுணர் டொக்டர் சுரங்க பெர்னாண்டோ தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யு.கமகே, கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக ராஜபக்ஷ, மத்திய மாகாண பிரதம செயலாளர் அஜித் பிரேமசிங்க, கண்டி மாவட்ட செயலாளர் சந்தன தென்னகோன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
Discussion about this post