மக்களின் அபிலாஷைகள், விருப்பங்களை வெளிப்படுத்தும் அடிப்படை உரிமையான ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் தலையிடுவது ஜனநாயகத்தை நசுக்கும் சர்வாதிகார முயற்சி என சட்டத்தரணிகள் ஒன்றிணைவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி அல்லது பாராளுமன்றத்தின் கொள்கைகளை அங்கீகரிப்பது அல்லது நிராகரிப்பதே ஜனநாயகம் என அந்த அமைப்பு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தலை ஒத்திவைக்கும் முன்மொழிவுகள் தொடர்பான விடயங்களை தெளிவுபடுத்தும் வகையில், சட்டத்தரணிகள் ஒன்றிணைவு அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி சட்டத்தரணிகளான உபுல் ஜயசூரிய, கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன, டினால் பிலிப்ஸ், சாலிய பீரிஸ், S.D.ஜயங்க, உபுல் குமாரப்பெரும, பேராசிரியர் தீபிகா உடுகம உள்ளிட்ட சட்டவல்லுநர்கள், சட்டத்தரணிகள் ஒன்றிணைவில் அங்கம் வகிக்கின்றனர்.
மூன்றில் இரண்டு அதிகாரத்தைக் கொண்டிருந்த பாராளுமன்றம், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை முற்றாகத் தகர்க்கப்பட்டுள்ளதை போராட்டத்தின் மூலம் மக்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக அவர்கள் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இவ்வாறானதொரு பின்னணியில், ஆட்சிக்கு வந்த தற்போதைய ஜனாதிபதி ஜனநாயகத்தை பாதுகாத்து மக்களின் இறையாண்மைக்கு அடிபணிய கடமைப்பட்டுள்ளார் என சுட்டிக்காட்டியுள்ள சட்டத்தரணிகள் ஒன்றிணைவு, நிறைவேற்று அதிகாரம், பாராளுமன்றம் உள்ளிட்ட அரச கட்டமைப்புக்கு சட்டபூர்வமான தன்மையை மீளப்பெற்றுக் கொடுப்பது அவரது பிரதான பணியாக இருந்திருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
ஆனால் அதற்கு பதிலாக, 2023 உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த மறுத்த ஜனாதிபதி, சட்டப்பூர்வத்தன்மையை இழந்த பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவுடன் அடக்குமுறை, சர்வாதிகார நிகழ்ச்சி நிரலை அமுல்படுத்தி வருவதாக இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 30/2 பிரிவின்படி, ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் எனவும் அரசியலமைப்பின் 62/2 பிரிவின் கீழ் பாராளுமன்றத்தின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் என்பதனையும் சட்டத்தரணிகள் ஒன்றிணைவு தமது அறிக்கையில் நினைவுபடுத்தியுள்ளது.
அந்த காலவரையறையை மாற்றுவதற்கு அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் எனவும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அது அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பை மாற்றுவதற்கான திருத்தம் என்பதால், அதற்கு பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்கு, சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் எனவும் சட்டத்தரணிகள் ஒன்றிணைவு சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வாறான பின்னணியில் தேர்தலை ஒத்திவைக்கும் முன்மொழிவுகள் மக்களின் இறையாண்மையை முற்றாக இழிவுபடுத்துவதாகவும், அது திட்டமிட்டு அரசியலமைப்பை புறக்கணிக்கும் விடயம் எனவும் சட்டத்தரணிகள் ஒன்றிணைவு மேலும் தெரிவித்துள்ளது.
பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் 50% வாக்குடன் இன்னும் ஒரு வாக்கு மேலதிகமாக பெறுவதன் முலம் அரசியலமைப்பில் அனைத்து திருத்தங்களையும் மேற்கொள்ள முடியுமா என கேள்வி எழுப்பும் சட்டத்தரணிகள் ஒன்றிணைவு ‘அரசியலமைப்பு அறநெறி’ என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அரசியலமைப்பு திருத்தச் செயன்முறை நிர்வகிக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
Discussion about this post