இறக்குமதி செய்யப்பட்ட உந்துருளிகளின் உதிரி பாகங்களை சேகரித்து உந்துருளிகளை செய்து போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்யும் மோசடி கும்பலொன்றை கைது செய்துள்ளதாக ஊழல் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த கும்பல் நேற்று(25) ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மோட்டார் சைக்கிள்கள் ஜப்பானில் தயாரிக்கப்பட்டதை குறிக்கும் போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகன உதிரிபாகங்கள்
குருநாகல், வாரியபொல, மாஸ்பொத்த மற்றும் நாத்தாண்டிய ஆகிய பகுதிகளில் உந்துருளிகள் விற்பனை செய்யும் நான்கு நிலையங்களிலும் நேற்று சோதனை நடத்தப்பட்டு 20 கோடி ரூபா பெறுமதியான 45 உந்துருளிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
வாங்கிய உந்துருளிகளை பதிவு செய்ய முடியாமல் இந்த வாகன கடத்தலில் சிக்கிய பொதுமக்கள் செய்வதறியாது தவிப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குருநாகலில் வாகன உதிரிபாகங்களை இறக்குமதி செய்யும் வர்த்தகர் ஒருவர் உந்துருளிகளை உதிரி பாகங்களாக கொண்டு வந்து தனது நிலையங்களில் விற்பனைக்காக சேகரித்துள்ளதாக இந்த உந்துருளிகள் விற்பனை செய்யப்படும் நிலையங்களின் உரிமையாளர்களிடம் விசாரணை நடத்திய போது தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உந்துருளிகளாக பதிவு
உந்துருளி ஒன்று 3 – 5 இலட்சம் வரையிலான விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த உந்துருளிகளை ஜப்பானில் தயாரிக்கப்பட்ட உந்துருளிகளாக பதிவு செய்வதற்காக கடத்தல்காரர்கள் போலியான ஆவணங்களை தயாரித்து சமர்ப்பித்துள்ளமை கண்டறியப்பட்டதன் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கைப்பற்றப்பட்ட உந்துருளிகள் மேலதிக விசாரணைகளுக்காக விற்பனை நிலையத்திற்கு சொந்தமான வாரியபொல மற்றும் குருநாகல் காவல் நிலையங்களில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Discussion about this post